சென்னை மாநகராட்சி பகுதியில் அனுமதி பெறாமல் கொடுக்கப்பட்ட கழிவு நீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது.

குடியிருப்புகள், நிறுவனங்கள் ஆகியவற்றில் இருந்து வெளியேறும் சுமார் 1,813 கழிவு நீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அனுமதி பெறாமல் இணைப்பு கொடுத்ததற்காக ரூ.5.98 லட்சம் அபராதம் விதித்து சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

சென்னை அதன் புறநகர் பகுதிகளை உள்ளடக்கி நாளுக்கு நாள் விரிவடைந்து வரும் நிலையில் அதன் குடியிருப்புகளும் அதிகரித்து வருகிறது.

மழைநீர் வடிகால், கழிவு நீர் கால்வாய், குடிநீர் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய உள்கட்டமைப்புகள் இந்த புதிய குடியிருப்பு பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அதேபோல், நீர்நிலை, நத்தம் புறம்போக்கு உள்ளிட்ட இடங்களை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட நகர்களில் இந்த உள்கட்டமைப்புகள் இல்லாத நிலையில் இங்கு குடியிருப்போர் கழிவு நீரை அருகில் உள்ள கழிவுநீர் மற்றும் மழைநீர் கால்வாய்களில் மடைமாற்றி விடுகின்றனர்.

இதனால் மழைக்காலங்களில் மழைநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு சாலைகளில் தண்ணீர் தேங்கும் நிலை ஏற்படுவதுடன் சில இடங்களில் வெள்ள பாதிப்புகளும் ஏற்படுவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.