சென்னை: பேரறிஞர் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ந்தேதி தி.மு.க. முப்பெரும் விழா நடைபெறுகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக காணொளி காட்சி மூலம் விழா நடைபெறும் என திமுக தலைமை அறிவித்து உள்ளன. இதையடுத்து, 5 பேருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் விருது வழங்குகிறார்
தி.மு.க. சார்பில் ஆண்டு தோறும் பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17, அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15, தி.மு.க. கழகம் தொடங்கப்பட்ட செப்டம்பர் 17 ஆகிய இந்த 3 முக்கிய நிகழ்வுகளையும் இணைத்து முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான முப்பெரும் விழா நாளை (புதன்கிழமை) மாலை 5 மணிக்கு திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற உள்ளது.
இந்த முப்பெரும் விழாவில் பெரியார், அண்ணா, கலைஞர், பாவேந்தர், பேராசிரியர் ஆகியோர் பெயரில் 5 விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த விருதுகள் தமிழ் அறிஞர்கள், தமிழ்ச் சமூகத்திற்குத் தொண்டாற்றியவர்கள் போன்றோருக்கு வழங்கப்பட்டு கவுரவிக்கப்படுவார்கள். இதுவரை 4 பேருக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு முதல், மறைந்த பேராசிரியர் நினைவாக, அவரது பெயரில் பேராசிரியர் விருது வழங்கப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
பெரியார் விருது – மிசா மதிவாணன்
அண்ணா விருது – எல்.மூக்கையா
கலைஞர் விருது – கும்மிடிப்பூண்டி வேணு
பாவேந்தர் விருது – வாசுகி ரமணன்
பேராசிரியர் விருது – முபாரக்
ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.
விருதுகள் அறிவிக்கப்பட்ட நபர்களுக்கு, நாளை மாலை கலைஞர் அரங்கத்தில் இந்த விருதுகள் வழங்கப்பட உள்ளது. இந்த விருது வழங்கும் விழாவுக்கு தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமை தாங்குகிறார். முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுகள் மற்றும் , பரிசுகள் வழங்கி சிறப்புரை ஆற்றுகிறார். முப்பெரும் விழா நிகழ்ச்சிகளை அனைத்து மாவட்டங்களிலும் காணொலி காட்சி வாயிலாக காணும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஒவ்வொரு மாவட்ட தி.மு.க. சார்பிலும் திருமண மண்டபங்கள் மற்றும் அரங்கங்களில் காணொலி காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் மாநில நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர்.