சென்னை: திமுக முப்பெரும் விழாவில் கலந்துகொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை வேலூர் செல்கிறார். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
செப்டம்பர் 15 பேரறிஞர் அண்ணா பிறந்தநாள், செப்டம்பர் 17 பெரியார் பிறந்தநாள் மற்றும் செப்டம்பர் 17 ஆம் தேதி 1949 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்ட நாள் ஆகிய மூன்றையும் ஒன்றிணைத்து, திமுக சார்பில், ஆண்டுதோறும் முப்பெரும் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கலைஞர் நூற்றாண்டு விழாவும் இணைந்துள்ளதால், இந்த விழாவினை கோலாகலமாக நடத்த திமுக தலைமை அறிவுறுத்தி உள்ளது.
அதன்படி, வேலூர் மாவட்டத்தில், திமுகவின் முப்பெரும் விழா செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி நடைபெறுகிறது. வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பள்ளிகொண்டா அடுத்த கந்தநேரி பைபாஸ் சாலை அருகில் அதற்கான மேடை அமைக்கும் பணிகள் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த விழாவில், திமுக ஆண்டுதோறும் வழங்கும், விருதுகள் வழங்கப்பட உள்ளது.
இதுதொடர்பாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பெரியார் விருது மயிலாடுதுறை கி. சத்தியசீலனுக்கும், அண்ணா விருது மீஞ்சூர் க. சுந்தரத்திற்கும், கலைஞர் விருது அமைச்சர் ஐ. பெரியசாமிக்கும் பாவேந்தர் விருது தென்காசி மலிகா கதிரவனுக்கும் பேராசிரியர் விருது பெங்களூர் ந. இராமசாமிக்கும் வழங்கப்பட உள்ளது.
இதன் காரணமாக நாளை வேலூரில் நடைபெறும் திமுகவின் முப்பெரும் விழாவில் பங்கேற்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 6 மணிக்கு ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சென்னையிலிருந்து காட்பாடிக்கு செல்கிறார். நாளை முப்பெரும் விழாவை முடித்து விட்டு இரவு 8.35 மணிக்கு காட்பாடியில் இருந்து சென்னை திரும்புகிறார்.
வேலூர் வரும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்படுகிறது. அந்த பகுதியில் தி.மு.க. கொடி தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன. இன்று மாலை ரயில் மூலம் காட்பாடி வருகை தரும் முதலமைச்சருக்கு காட்பாடி ரெயில் நிலையத்தில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது. அன்று இரவு வேலூர் அரசு சுற்றுலா மாளிகை அல்லது தனியார் ஓட்டலில் தங்குகிறார்
17-ந் தேதி காலை 10.15 மணிக்கு வேலூர் மேல்மொணவூரில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமுக்கு செல்கிறார். அங்கு நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் வீடுகளை காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கிறார். இதற்காக இலங்கை தமிழர் குடியிருப்பு பகுதியில் சிறிய அளவிலான மேடை அமைக்கப்பட்டுள்ளது.
அந்த நிகழ்ச்சி முடிந்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க முப்பெரும் விழா நடைபெறும் இடத்திற்கு செல்கிறார். அங்கு தி.மு.க கொடி ஏற்றி வைத்து நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார். இதனையடுத்து அங்கிருந்து அவர் மீண்டும் வேலூருக்கு வந்து ஓய்வு எடுக்கிறார்.
தி.மு.க. முப்பெரும் விழாவில் 17-ந்தேதி காலை முதல் பட்டிமன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. மாலையில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கலந்து கொண்டு விழா பேரூரை ஆற்றுகிறார்.
முதலமைச்சர் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வேலூரில் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.