சென்னை: நீட் மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்ப மறுத்து வரும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டத்தை மதிக்காமல் செயல்படுவதாக கூறி, அவரை நீக்கக்கோரி திமுக எம்.பிக்கள் மக்களவையில் கோஷமிட்டனர்.

தமிழ்நாடு அரசின் பல்வேறு நடவடிக்கைகளுக்கு ஆளுநர் ரவி முட்டுக்கட்டை போட்டு வருகிறார். நீட் விவகாரம், தேசிய கல்விக்கொள்கை உள்பட பல்வேறு விவகாரங்களில் ஆளுநரின் நடவடிக்கை மாநில அரசுக்கு எதிரான மனநிலையில் உள்ளது.

இந்த நிலையில்,  தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நீக்கக்கோரி டி.ஆர்.பாலு உள்ளிட்ட திமுக எம்.பிக்கள் மக்களவையில் முழக்கம் எழுப்பி வருகின்றனர். தமிழக ஆளுநர் ரவி சட்டத்தை மதிக்காமல் செயல்பட்டு வருவதாகவும்,   சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய 7 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை எனவும் டி.ஆர்.பாலு குற்றம்சாட்டினார். இதன் காரணமாக மக்களவையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

இதற்கிடையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மதியம் கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.