சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகளில் ஒருவரான பேரறிவாளன், 32 ஆண்டுகளுக்கு பிறகு உச்சநீதிமன்ற தீர்ப்பு காரணமாக இன்று புழல் சிறையில் இருந்து  ஜாமீனில் வெளியே வந்தார். அவரை தாயார் அற்புதம்மாள் உள்பட உறவினர்கள், வழக்கறிஞர்கள் சிறைவாசலில் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி சென்னை அருகே பூந்தமல்லியில் விடுதலைப்புலிகளால் மனித வெடிகுண்டு தாக்குதலால் கொலை செய்யப்பட்ட வழக்கில்,  முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 7 பேர்  கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களின் தூக்கு தண்டனை பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இதையடுத்து,   சுமார் 32 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். அவர்களை விடுவிக்க அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வந்த நிலையில், காங்கிரஸ் கட்சியினரின் எதிர்ப்பு காரணமாகவும், ஒரு நாட்டின் பிரதமரை கொலை செய்த வழக்க என்பதாலும், குற்றவாளிகளை விடுதலை செய்ய மத்தியஅரசும் அனுமதி மறுத்து வந்தது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்ததும், பேரறிவாளன் உடல்நிலை காரணம் காட்டி, கடந்த 9 மாதங்களாக பரோல் வழங்கி வந்தது. இதற்கிடையில், அவர் ஜாமின் கேட்டு கடந்த 2016ம் ஆண்டு தாக்கல் செய்த வழக்கும், உச்சநீதி மன்றத்தில், கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது, பரோலில் இருந்தாலும் வெளியில் செல்ல முடியவில்லை என்றும், வீட்டுச் சிறையில் இருப்பது போல் உள்ளதாகவும் பேரறிவாளன் தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால் பேரறிவாளனை ஜாமினில் விட மத்தியஅரசு எதிர்ப்பு தெரிவித்தது.

ஆனால், பேரறிவாளன் நன்னடத்தை மற்றும் அவரது உடல்நிலையை கருத்தில்கொண்டு, மத்தியஅரசின் எதிர்ப்பை மீறி, உச்சநீதிமன்றம் பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

இதனையடுத்து பரோலில் இருந்து வந்த பேரறிவாளன் இன்று காலை புழல் சிறையில் இன்று ஆஜரானார். அதைத் தொடர்ந்து சட்ட நடவடிக்கைப்படி, அவரது பரோல் ரத்து செய்யப்பட்டு, ஜாமின் நடைமுறைப்படி அவர் சிறையில் இருந்து வெளியேற அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து புழல் சிறையில் இருந்து வெளியே வந்த பேரறிவாளனை அவரது தாயார் அற்புதம்மாள் மகிழ்ச்சியுடன் கட்டித்தழுவி வரவேற்றார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அற்புதம்மாள், தனது மகன் ஜாமினில் விடுதலையாக உதவிசெய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார். பேரறிவாளனுக்கு ஜாமின் கிடைக்க காரணமாக இருந்த அனைவருக்கும்  நன்றி  தெரிவித்துக்கொள்வதாகவும் குறிப்பிட்டார். மேலும் பேரறிவாளனுக்கு கிடைத்துள்ள ஜாமின் இடைக்கால நிவாரணமே என்று கூறிய அற்புதம்மாள்,  இந்த வழக்கில் இருந்து பேரறிவாளன் முழுமையாக விடுதலை  பெற சட்டப்போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்தார்.