டெல்லி: தொகுதி மறுவரையறை மசோதா கூட்டாட்சியை சிதைக்கும் முயற்சி என்று தொகுதி மறுவரையறை மசோதா மீதான விவாதத்தில் குற்றம் சாட்டிய திமுக எம்.பி. கனிமொழி, இந்த விஷயத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு என்று விமர்சித்துள்ளார்.

மக்களவை சிறப்பு கூட்டத்தொடர் நேற்று (ஏப்ரல் 16) தொடங்கி நடைபெற்று வருகிறது. 3 நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தொடரில் 3 முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்தியஅரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு, தொகுதி மறுவரையறை உள்பட 3 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு, அதன்மீது விவாதங்கள் நடைபெற்று வருகிறது.
இந்தஎ விவாதத்தில் பேசிய திமுக எம்பி கனிமொழி , தமிழ்நாட்டின் 8 கோடி மக்களின் குரலாக மக்களவையில் உரையாற்றி கொண்டிருக்கிறேன். தொகுதி மறுவரையறை மசோதா கூட்டாட்சியை சிதைக்கும் முயற்சி. மத்திய அரசின் குரலை ஏற்று தென்மாநிலங்கள் மக்கள் தொகையை கட்டுப்படுத்தி உள்ளன. 5 மாநில தேர்தல் பணிகளை குலைக்கவே அவசர அவசரமாக மசோதாக்கள் கொண்டு வரப்பட்டுள்ளன என்றவர், “மகளிர் இடஒதுக்கீடு மசோதா 2023 அமல்படுத்தப்பட்டதாக நேற்றிரவு 10 மணிக்கு அவசர அவசரமாக அரசிதழில் வெளியிட்டதற்கு என்ன அர்த்தம்? இவ்வளவு காலம் அமைதியாக இருந்துவிட்டு மக்களவையில் விவாதம் நடைபெற்ருக் கொண்டிருக்கும் வேளையில் அரசிதழில் வெளியிடுவதற்கான தேவை என்ன? அப்படியெனில் இந்த அவைக்கான மதிப்பு என்ன?
தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரத்தில் திசைத்திருப்பும் வகையில் அவசர அவசரமாக நாடாளுமன்ற சிறப்பு அமர்வில் மூன்று மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதாவை திமுக சார்பாகவும், தமிழ்நாடு சார்பாகவும் நான் எதிர்க்கிறேன்.
15 ஆண்டுகள் பழமையான 2011 மக்கள்தொகையின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்ய முயற்சிக்கிறீர்கள். 850 தொகுதிகளாக மாற்றப்பட்டால் பெரும்பாலான எம்பிக்களுக்கு மக்களவையில் பேசுவதற்குகூட நேரம் கிடைக்காது.
தற்போது தமிழ்நாட்டின் குழந்தை பிறப்பு விகிதமானது 1.6 மட்டுமே. அமெரிக்கா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளைவிட குறைவு. எங்கள் மாநிலத்தின் மக்கள்தொகை கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது. எங்கள் பெண்களுக்கு கல்வியறிவு வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டின் சாதனையால் நாடு பெருமைக் கொள்ள வேண்டும். உத்தரப் பிரதேசத்தின் மக்கள்தொகை கடந்த 1971 ஆம் ஆண்டைக் காட்டிலும் 120 சதவிகிதம் அதிகரித்துள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் மக்கள்தொகை வெறும் 15 சதவிகிதம் மட்டுமே அதிகரித்துள்ளது.
தொகுதி மறுவரையறை சட்டத் திருத்த மசோதாவில், கடைசியாக எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மறுவரையறை செய்யப் போவதாக தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சர் ஒன்று சொல்கிறார், மசோதாவில் ஒன்று இருக்கிறது. கடைசியாக 2011 இல் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதனடிப்படையில் உ.பி.க்கு 13 தொகுதிகள் கூடுதலாக கிடைக்கும். தமிழ்நாடு 11 தொகுதிகளை இழக்க நேரிடும். ஆனால், நேற்று உள்துறை அமைச்சர் பேசும்போது, தமிழ்நாட்டுக்கு 50 சதவிகிதம் கூடுதல் தொகுதி கிடைக்கும். 39 தொகுதிகள் 59 ஆக அதிகரிக்கும் என்றார்.
தொகுதி மறுவரையறை ஆணையமானது ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் மத்திய அரசு அமைக்கும் என்று மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்பொருள் மாநில அரசுகளையோ, எதிர்க்கட்சிகளையோ, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடமோ ஆலோசிக்கத் தேவையில்லை என்பதாகும். அனைத்து மாநிலங்களுக்கும் 50 சதவிகித உறுப்பினர்கள் அதிகரிப்பார்கள் என்று உள்துறை அமைச்சர் கூறுகிறார். அவர் கூறுவதை முழு அதிகாரம் கொண்ட தொகுதி மறுவரையறை ஆணையம் நிராகரித்தால் வழக்கம்போல் புல்டோசர் வைத்து ஆணையத்தை தகர்ப்பீர்களா? அல்லது தொகுதி மறுவரையறை ஆணையத்துக்கு எதிராக மத்திய அரசு வழக்கு தொடருமா?
ஏனெனில், மசோதாவில் தொகுதி மறுவரையறை ஆணையம் உத்தரவிட்டால், அதனை எந்த நீதிமன்றத்தாலும் கேள்வி கேட்க முடியாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் தேர்தலுக்குப் பிறகு நாடாளுமன்ற சிறப்பு அமர்வை நடத்துங்கள் எனக் கூறினோம். ஆனால், இரு வாரங்கள்கூட உங்களால் பொறுக்க முடியவில்லை.
2023 இல் இருந்து அமைத்தியாக இருந்த நீங்கள் தற்போது ஏன் இவ்வளவு அவசரம்?மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் ஆதரிக்கிறோம். ஆனால், மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தொகுதி மறுவரையறை மசோதாவுடன் ஒன்றிணைத்து தாக்கல் செய்துள்ளது சதியாகும். ஆகையால், தொகுதி மறுவரையறையை எதிர்ப்பவர்களை மகளிர் இடஒதுக்கீட்டை எதிர்ப்பவர்களாக பாஜக சித்திரிக்கிறது.
பாஜக இந்தியப் பெண்களை மனித கவசமாக பயன்படுத்துகிறது. தொகுதி மறுவரையறை செய்யாமல் தற்போதைய உறுப்பினர்கள் எண்ணிக்கையில் இருந்து 33 சதவிகித மகளிர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்தாமல் 2029 மக்களவைத் தேர்தலில் அமல்படுத்த வேண்டும்”
இவ்வாறு கூறினார்.
[youtube-feed feed=1]