பாஜகவிற்கு எடுபிடி வேலை செய்யும் அதிமுக அரசு: மு.க.ஸ்டாலின்   தாக்கு

Must read


சென்னை: பாஜகவிற்கு எடுபிடி வேலை செய்யும் அதிமுக என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:,

எப்பாடு பட்டாவது தங்கள் ஆட்சியை காப்பாற்றிக் கொண்டால் போதும் என்ற ஒரே நோக்கத்துடன் செயல்படும் அதிமுக அரசு, மத்திய பா.ஜ.க. அரசின் எடுபிடியாக மட்டுமே மனமுவந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது, மாநில உரிமைகளுக்காகவோ, தமிழர்களின் உரிமைக்காகவோ ஆக்கபூர்வமான நடவடிக்கையை எடுப்பதற்கு அதிமுக அரசு தயாராக இல்லை என்பது ஜல்லிக்கட்டு பிரச்சினையில் வெளிப்படையாகவே அரங்கத்திற்கு வந்து விட்டது.

தமிழக நலன்களைப் புறக்கணிக்கும் அதிமுக அரசின் இது போன்ற செயல்பாடுகளை தமிழக மக்கள் வெகு காலம் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள். உலகத்தையே ஈர்க்கும் “அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு” களையிழந்து நிற்பதைப் பார்த்து ஒவ்வொரு தமிழனும் கண்ணீர் சிந்துகிறான் என்றால், அப்படி தமிழன் இன்று சிந்தும் கண்ணீர் வீண் போகாது என்பதை மட்டும் மத்திய, மாநில அரசுகள் உணர வேண்டும்.

தமிழக மண்ணின் மாண்பைப் போற்றும் வீரமிக்க இந்த ஜல்லிக்கட்டு நடக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதையும், இந்த ஜல்லிக்கட்டு உரிமையை மீட்டு எடுக்க, திராவிட முன்னேற்றக் கழகம் எரிமலையாக குமுறிக் கொண்டிருக்கும் இளைஞர் சமுதாயத்திற்கு என்றைக்கும் துணை நிற்கும் என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்”  இவ்வாறு முக ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article