சென்னை:
திமுக உறுப்பினர்களின் ஒரு வார சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து ஜனநாயக கடமையாற்ற அனுமதிக்குமாறு கி.வீரமணி சபாநாயகருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திராவிடர் கழக பொதுச்செயலாளர் கி.வீரமணி விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
vernamani-1
தமிழ்நாடு சட்டமன்றத்தின் நடவடிக்கைகள் நாட்டில் உள்ள பொதுவான பலருக்கும் – ஏற்கத்தக்கதாகவோ, ஜனநாயகம் பரிமளிப்பதாகவோ இல்லாத காட்சி நமக்கெல்லாம் வேதனை யைத் தருகிறது!
பெருமைக்குரிய தமிழக சட்டமன்றம் – இன்று?
ஒரு காலத்தில் தமிழ்நாடு சட்டமன்றம் இந்தியாவுக்கே ஒரு எடுத்துக்காட்டான சட்டமன்றமாக இருந்தது! ஆரோக்கியமான விமர்சனங்களும், ஆளுங்கட்சி அவற்றை எதிர்கொண்டு, எதிர்க்கட்சித் தலைவர்களின் கருத்துக்கு மதிப்பளித்து பதிலுரைத்தலும், அன்பார்ந்த நட்புறவு – சகிப்புத் தன்மை – கண்ணியம் கொலுவோச்சும் மன்றமாக நடந்தது!
கடந்த சில மாதங்களாக நடைபெறும் சட்டமன்றத்தின் பல்வேறு நிகழ்வுகள், அதற்குப் பெருமை சேர்ப்பதாகவோ – ஆளுங்கட்சி – ஜனநாயக சகிப்புத்தன்மை யால் எதிர்க்கட்சிகளை சிறப்பாக நடத்தி கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்கின்றனர் என்பதாகவோ இல்லை.
இது இப்போது மட்டுமல்ல; முன்பு தே.மு.தி.க. தலைவர் திரு.விஜயகாந்த் கட்சி எதிர்கட்சியாக இருந்தபோதே துவங்கிய ஒரு வகையான விரும்பத்தகாத போக்காகும்!
அவரது கட்சி உறுப்பினர்களை தனியே ஒரு குழுவாக்கியமை.  ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே   அடிதடி நடந்திடக் காரணமாக இருந்தமை –  அதன் பின் சிலரை தொடர் முழுவதும் அல்ல, தொடர்ந்து சபாநாயகர் (இன்றுள் ளவரே) நீக்கி வைத்த ஆணையினை  எதிர்த்து அவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்குப் போட்டு, உச்சநீதிமன்றம் இதே (முந்தைய சட்டமன்றத்தில்) சபாநாய கரின் தடை ஆணையை ரத்து செய்து உறுப்பினர்களை சபைக்குச் செல்ல, கலந்து கொள்ள அனுமதித்தது எல்லாம் ஜனநாயக அலங்கோல, அரசியல் சட்ட நெறிமுறைகளுக்கேகூட எதிரான, விரும்பத்தகாத போக்குகள் ஆகும்! மூட நம்பிக்கையின் திருவிளை யாடல்!
வெளியே நடந்தவைகளைப் பொருத்தமின்றி அவையில் பேசலாமா?

இப்போதும் – பலமான எதிர்க்கட்சியாக தி.மு.க.வின் 89 உறுப்பினர்களையும், அதன் தோழமைக் கூட்டணிக் கட்சிகளாக காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினரையும் கொண்டுள்ள நிலையில், சட்டமன்றத்தில் ஆளுங்கட்சி உறுப் பினர்கள் வேண்டுமென்றே தி.மு.க. தலைவரைப்பற்றியும், வெளியே நடந்த திட்டங்கள் – அறிவிப்புகள் போன்றவை பற்றியும், முற்றிலும் பொருத்தமில்லாத பேச்சுகளைப் பேசுவதும், அதற்கு எதிர்க்கட்சியினர் ஆட்சேபணை தெரிவிக்க, விளக்கம் அளிக்க முயற்சிக்கும்போது அதை அனுமதிக்காமல், சபாநாயகர் ஒரு சார்பானவராக செயல்படுகிறாரோ என்றே நடுநிலையாளர் பலரும் சந்தேகப்படும் வண்ணம் ஆளுங்கட்சியினரின் பேச்சை அவைக் குறிப்பிலிருந்து நீக்காமல், எதிர்க்கட்சியினரின்   பேச்சுகளை மட்டும் நீக்குவதுமான போக்கு முற்றிலும் ஏற்கத்தக்கதாக ஜன நாயகவாதிகள் நம்பமாட்டார்கள்.
எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை நடத்திய விதம் சரியா?
குறிப்பாக நேற்று நடந்த அவலம் – எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை குண்டுக்கட்டாகத் தூக்கி வெளியே கொணர்ந்து ‘‘எறிந்தனர்’’ என்பது சட்டமன்ற நடவடிக்கை களுக்கோ, சபாநாயகருக்கோ, ஆளுங்கட்சிக்கோ ஒருபோதும் பெருமை சேர்ப்பதாகாது; இழுக்கையே ஏற்படுத்தும். அதோடு, தி.மு.க. உறுப்பினர்கள் அத்துணைப் பேரையும் ஒரு வாரம் இடை நீக்கம் செய்தது சட்டப்படி சபாநாயகர் அவருக்குள்ள அதிகாரப்படி நியாயப்படுத்தப்பட்டாலும், நியாயப்படி, ஜன நாயகப் பண்புகளின்படி எவராலும் ஏற்கப்பட முடியாத ஜனநாயகப் படுகொலையாகவே கருதப்படும்.
ஏற்கெனவே உச்சநீதிமன்றம் தே.மு.தி.க. உறுப்பினர்கள் ‘சஸ்பெண்ட் பற்றிய தந்த தீர்ப்பு – சபாநாயகரின் அதிகாரம் வானளாவிய அதிகாரம் அல்ல என்று கூறியிருக்கிறது!
சட்டமன்றத்தின் பேச்சுகளுக்கு சட்டப் பாதுகாப்பு  (Immunity) உண்டு (எந்தக் கருத்தை வெளியே பேசினால் சட்ட நடவடிக்கை எடுக்க முடியுமோ, அதே கருத்தை உள்ளே பேசினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியாது என்பதுதான் அதன் சட்டப் பாதுகாப்பு (Immunity).

சபாநாயகர் என்பவர் யார்?

சபாநாயகர் என்பவர், சபையின் அத்துணை உறுப்பினர் களின் உரிமைகளையும்  காக்கும் பாதுகாவலர் ஆளுங் கட்சியின் ஓர் அங்கம் அல்ல.
danapal
‘‘The Speaker speaks for the house. That is why he is called as Speaker’என்பது, பிரிட்டிஷ் காமன்ஸ் சபையின் நீண்ட கால மரபு – தத்துவம்.
சபாநாயகர் ஆளுங்கட்சியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டாலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பின் அவர் கட்சி சார்பற்றவர் ஆவார்.
அவரை  அவரது தேர்வுக்குப் பின் இரண்டு பக்கமும், இரு கைகளையும் பிடித்து  ஆளுங்கட்சி முன்னவர், எதிர்க்கட்சித் தலைவர் அழைத்து வந்து சபாநாயகர் இருக்கையில் அமர வைப்பதன் தத்துவம், அவர் அனைவருக்கும் பொதுவான நடுநிலை தீர்ப்பு வழங்கும் கடமையைச் செய்பவர் என்று பறைசாற்றும் நிகழ்வு ஆகும்.
 சட்டமன்றத் தீர்ப்பை மறுபரிசீலனை செய்க!
எனவே, உடனே தமிழக சட்டமன்ற சபாநாயகர்  தனது தீர்ப்பை மறுபரிசீலனை செய்வதோடு, அவைக் குறிப்பு நீக்கங்கள்பற்றி அவ்வப்போது அது ஒரு சார்போ என்று பொதுவில் உள்ளவர்கள் கருதும்படியாகவும்  ஆணையிடுவது தேவைதானா?
நல்ல மரபுகளை உருவாக்க முயலுங்கள். உச்சநீதிமன்றத் தலையீடு தமிழக சட்டமன்றத்திற்குப் பெருமை தருவதல்ல; இரண்டும் இரண்டு முக்கிய அளவுகோல்.
எனவே, இதில் ஆளுங்கட்சி ‘‘ஜனநாயக விளையாட்டு’’ விளையாடக் கூடாது! நேற்றைய நடவடிக்கை வன்மையான கண்டனத்திற்குரியதாகும்.
             எதிர்க்கட்சித் தலைவரை அவர்  அறைக்கு அனுமதிக்காதது, மிகவும் வரம்பு மீறிய சட்ட   துஷ்பிரயோகமே! இப்போக்கு கைவிடப்படவேண்டியது அவசியமாகும்.