சென்னை
மிழக சட்டசபையில் இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஆளும்கட்சி, எதிர்க்கட்சிகளுக்கிடையேயான அமளி காரணமாக திமுக சட்டமன்ற உறுப்பினர்களை சபாநாயகர் ஒரு வார காலம் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டடார்.
இதைத் தொடர்ந்து நேற்று சட்டசபை வளாகம் வந்த எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக உறுப்பினர்களை சபா வளாகத்திற்குள் விட அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து சட்டசபை கேட்டில் அனைவரும் அமர்ந்து 2 மணி நேரம் தர்ணா போராட்டம் நடத்தினர்.
இன்று காலை வழக்கம்போல் சஸ்பெண்டு செய்யப்பட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்  சட்டசபை வளாகத்துக்கு வந்தனர். சட்டசபைக்கு வெளியே  உள்ள மரத்தடியில் நாற்காலிகள் போட்டு அமர்ந்து போட்டி சட்டசபை கூட்டம் நடத்தினார்கள்.
இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் சபாநாயகராக அமர்ந்து போட்டி சட்டசபை கூட்டத்தை நடத்தினார்.
அதற்கு தேவையான மைக் வசதியும் செய்யப்பட்டு இருந்தது.  இந்த கூட்டத்தில் சஸ்பெண்டு  செய்யப்பட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்  அனைவரும்  கலந்து கொண்டனர்.

அவைத்தலைவராக இருந்த துரைமுருகனை, திமுகவினர், அவைத்தலைவர் அவர்களே… அவைத் தலைவர் அவர்களே என்று மீண்டும் மீண்டும் அழைத்தனர்.

அப்போது திமுக உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். அதற்கு, அவைத் தலைவர் என்ன சொல்வாரோ அதுபோல, துரைமுருகனும் பேசி நடித்து, நகைச்சுவையை ஏற்படுத்தினார்.

பேரவைக் கூட்டத்தில் அடிப்பது போல மணி அடித்து, கோஷங்கள் எழுப்பி, அவையை போலவே ஒரு மணி நேரம் போட்டிப் பேரவைக் கூட்டத்தை நடத்திகாட்டினர் திமுக உறுப்பினர்கள்.

ஆளுங்கட்சி வரிசை, எதிர்க்கட்சி வரிசை போல் எதிர்எதிரே தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அமர்ந்து கேள்விகள் கேட்டனர். சட்டசபையில் நடப்பது போலவே மாதிரி சட்டசபை நடத்தினர்.
சட்டசபையில் நடப்பது போல் கூச்சல்-குழப்பம் ஏற்படுத்தினார்கள்.

தமிழக சட்டசபை வளாகத்தில் சஸ்பெண்ட் திமுக எம்.எல்.ஏ.,க்கள் ஸ்டாலின் தலைமையில் போட்டி சட்டசபை நடத்தி வருவதால் அங்கு பதட்ட சூழல் நிலவி வருகிறது. சட்டசபை வளாகம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.  தலைமை செயலக வளாகம் பரபரப்பாக காணப்படுகிறது.