சென்னை:
போட்டி சட்டசபை கூட்டியது ஏன் என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்தார்.
சட்டசபை வளாகத்தின் வெளியே உள்ள மரத்தடியில் சுமார் 1 மணி நேரம் திமுக எம்.எல்.ஏ.க்கள் பங்குகொண்ட போட்டி சட்டசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டம் முடிந்ததும் ஸ்டாலின் கூறிய தாவது:stalin
       மாதிரி சட்டமன்றம் எப்படி நடக்கும் என்பதை எங்களுடைய உறுப்பினர்களைக் கொண்டு ஒரு மணி நேரம் நடத்தியிருக்கிறோம். அப்படி நடத்தியிருந்த நேரத்தில், எங்களது கட்சியின் மூத்த தலைவர் துரைமுருகன் அவைத் தலைவராக இருந்து செயல்பட்டார்.
கூட்டத்தில் யாரையும் கிண்டலோ, கேலியோ செய்யக்கூடாது என்றும், யாரையும் விமரிசிக்கக் கூடாது என்ற அடிப்படையில், மக்கள் பிரச்னையை மட்டுமே பேச வேண்டும் என்று உறுப்பினர்கள் அனைவருக்கும் உத்தரவிட்டு கூட்டத்தை நடத்தியிருக்கிறோம்.
ஒரு சட்டமன்றம் எப்படி நடக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக நடத்திக் காட்டி யிருக்கிறோம்.
திமுக உறுப்பினர்கள் அவைக்கு வரக் கூடாது என்று அவைத் தலைவர் உத்தரவு போட்டிருக்கும் நிலையில், அவைக்குச் சென்ற எங்களது திமுக உறுப்பினர்கள், காங்கிரஸ் உறுப்பினர்கள், முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் அவையில், இடை நீக்கம் செய்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால், அதற்கு அவைத் தலைவர் தனபால் ஒப்புக் கொள்ளவில்லை.
அதே போல, பிற கட்சித் தலைவர்களும் இடை நீக்கத்தை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தினர். அவர்களுக்கு, கட்சித் தலைவர் கருணாநிதி சார்பில் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

எதிர்க்கட்சித் தலைவர் அறைக்கு செல்ல முடியாத அளவுக்கு இன்றும் அறை எண் 4ன் கதவு பூட்டப்பட்டுள்ளது.
சட்டப்பேரவை நடவடிக்கைகளை நேரடியாக தொலைக்காட்சியில் ஒளி பரப்பினால், யார் தவறு செய்கிறர்கள் என்பது பொதுமக்களுக்குத் தெரியும். எனவே, பேரவை நடவடிக்கைகளை நேரடியாக ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இப்போது நாங்கள் மாதிரி சட்டப்  பேரவையை நடத்தினோம். அதனை நீங்கள் பார்த்தீர்கள். பதிவும் செய்து கொண்டீர்கள். பொதுமக்களுக்கும் பேரவைக் கூட்டம் எப்படி நடக்கும் என்பதை அறிந்து கொள்ள முடியும்.
எங்களது இடை நீக்கத்தை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளோம். அது திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. எனவே, விரைவில் நல்ல முடிவு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவித்தார்.