சென்னை :

டந்த 18ந் தேதி நடைபெற்ற  சட்டமன்ற நிகழ்வுகளை கண்டித்து திமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.

திருச்சி தென்னூர் உழவர் சந்தை பகுதியில் நடைபெற்று வரும் உண்ணாவிரத போராட்டத்தில் திமுகவின் செயல் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டுள்ளார். அவருடன் கட்சி தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சியினரும் பங்குபெற்றுள்ளனர்.

காஞ்சிபுரத்தில் நடைபெற்று வரும்  உண்ணாவிரத போராட்டத்தில் மூத்த தலைவர் துரைமுருகன் கலந்து கொண்டுள்ளார். அவர் பேசும்போது, சட்டசபையில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானமே தவறு என்றார்.

சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் மு.க. ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் பங்குபெறுள்ளார். சென்னை ஆதம்பாக்கம் பகுதியில் நடைபெற்று வரும் உண்ணாவிரத போராட்டத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் சென்னை மாநகர முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் மற்றும் கழக முன்னணியினர் கலந்து கொண்டுள்ளனர்.

சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்று வரும் உண்ணாவிரத போராட்டத்தில், ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் கருணாநிதியின் மகள் செல்வி, திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன், டி.ஆர்.பாலு மற்றும் கழக முன்னணியினர் கலந்துகொண்டுள்ளனர்.

திமுக குடும்பத்தினர் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளது பொதுமக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தி.மு.க.,வினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  புதுச்சேரியிலும் தி.மு.க.,வினர் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.