திமுகவிலிருந்து விலகுவதாகவே எண்ணமே இல்லை! :  மதுரை ஆதீனம் பேட்டி

Must read

வரலாறு முக்கியம் அமைச்சரே…

மதுரை ஆதீனம் - கருணாநிதி
மதுரை ஆதீனம் – கருணாநிதி

இப்போது அதி தீவிர அ.தி.மு.க. ஆதரவாளராக விளங்கும் மதுரை ஆதீனம், கடந்த 1989ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியின் போது, (3.3.1989 தேதியிட்ட) தராசு வார இதழுக்கு  அளித்த பேட்டி..
ஆடிய கால்களும்,பாடிய வாயும் ஓயாது என்னபார்கள். ஆனால் திராவிட முன்னேற்ற கழகத்தின் கட்சி மேடைகளில் கருணாநிதிக்கு நெருக்கமாகவும், இலங்கையில் அவதிவுறும் தமிழர்களுக்கு ஆதரவாக ‘’துப்பாக்கி தூக்குவேன்’’ என்று வீரமுழக்கமிட்டும், “அதற்கு என் பணி தடையாக இருப்பின் இந்த வேஷம் வேண்டாம்’ என்று உத்திராட்ச மாலையைக் கழற்றி வீசி எறிந்தும் பரபரப்பு அரசியலில் பங்கு பெற்று ‘’புரட்சித் துறவி’’ என்று பெயர் பெற்ற மதுரை ஆதினம், 292 வது பீடாதிபதி, ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஸ்ரீஞான சம்பந்த  தேசிக பரமாச்சாரியார் கடந்த சில மாதங்களாக அரசியலில் கலந்து கொள்ளாமல் அமைதியாகிவிட்டார் .அவரை செந்தில் [திருச்செந்தூர்] மாநகரில் மாசி மாதத் திருவிழாவில் வைத்துப் பிடித்தோம்.
நீண்ட இடைவேளிக்குப் பின் மீண்டும் தி.மு.க. அரியணை ஏறி விட்டதே?
ஏறத்தாழ பதின்மூன்று ஆண்டுகள் வனவாசம் போயிருந்த தி.முக. அரியணை ஏறியது ஆண்டவனின் திருவருள் திட்டப்படியேயன்றி வேறொன்றுமில்லை.!
மொத்த வாக்காளர்களில் 34% ஓட்டுக்களை மட்டுமே பெற்று திமுக ஆட்சி அமைத்திருக்கிறது. அப்படியானால் நாட்டிலுள்ள 66 சதவீத மக்கள், இந்த ஆட்சிக்கு  எதிப்பானவர்களாக இருப்பார்களே? இது எப்படி இறைவனின் சித்தமாகும்?
குறைந்த ஓட்டுகளைப் பெற்றாலும்,அதிக உறுப்பினர்களைத் தட்டிகொண்டு வந்துவிட்டார்களே… அதுதான் இறைவனின் சித்தம்! இப்படித்தான்  இயங்க வேண்டும் மென்பது  எம்பெருமானின் நீதி.!
 இந்த தேர்தலில் முன்பு போல தாங்கள் திமுகவுக்கு ஆதரவுப் பிரச்சாரம், அறிக்கைகள் எதுவுமே செய்யவில்லையே?  திமுகவில் இருந்து தாங்கள் விலகிவிட்டீர்களாமே?
[சிலநிமிட நேர மெளனத்திற்குப்பின்]  நமக்கிருக்கும் தமிழ், மொழி, இனப்பற்று இவை மூன்றும் திமுக.வில் மட்டுமே இருக்கிறது.  மற்ற எந்த கட்சிகளிலுமே இல்லை. ஆகவே நாம் திமுகவிலிருந்து விலகுவதாகவே எண்ணமே இல்லை. விலகவும் இல்லை. ஆனாலும் ..[மீண்டும் மெளனம்] இதற்கு முன்பு பலர் இதே கேள்வியை’ நம்மிடம் வினவினார்கள். நாம் அவர்களுக்கு, “தம்பிரான் சுவாமி இல்லை. அதனால்  வரமுடியவில்லை” என்று பதில் சொல்லி விட்டோம். தாங்கள்  பத்திரிகையாளர்கள் . எனவே  தங்களிடம் உண்மையைக் கூறிகிறோம்.
சொல்லுங்கள்…
ஆட்சி நிரந்திரமில்லை! இலங்கைப்பிரசனையில் தி,முக. ஈடுபடுவதற்கு முன்பே நாம் மேடைப் போட்டு பேசிவிட்டோம். அறிக்கைகள் உண்ணா நோன்பு செய்தோம். இது நேரத்தில்  இலங்கை பிரச்சினையில் தி.மு.க. வின்  கொள்கைகள், நம்முடன்  இணைந்து போனதால்  ஒன்றுபட்டுச் செயல்பட ஆரம்பித்தோம். அதனால் தி.முக மேடையில் அக்கட்சியின் தலைவருடன்  நெருங்கி பழகு வாய்ப்பு நமக்கு அதிகமாக கிடைத்தது. நெருங்கிப் பழகினோம். அறிக்கைகள் விட்டோம்.
அது, நமக்கு நற்பெயரையும், அரசியல் பரபரப்பையும் உருவாக்கித் தந்தது. நமது வளர்ச்சி அக்கட்சிக்கும், அக்கட்சியில் நமக்கும்  பெரும்பங்கு கிடத்தது. அதைக் கண்டு பொறாமைப் பட்ட சிலர் நம் வளச்சியைத் தடை செய்ய எண்ணியே செயல்பட்டார்கள். கட்சியின் தலைவர்தான்  நமக்கு பொருட்டே தவிர, மற்றவர்கள்  யாரும் அல்லர். ஆகவே நாம் எதைப்பற்றியும் சிந்திக்காமல் கட்சி சேவை ஆற்றினோம்.  இப்படி நாம் தி,முகவில் பங்கு பெற்று வளர்வதில் தி.மு.கவினருக்கு மட்டுமல்ல, அப்போது ஆட்சி செய்த அதிமுக அரசுக்கும் பொறுக்கவில்லை. எம்.ஜி.ஆர். தன்னுடன் இணைந்து  செயலாற்றும்படி எமக்குத் தூது அனுப்பினார். நாம் எம்.ஜி.ஆர்.ஆருடன் இணைய விரும்பவேயில்லை.
 
MGR
ஏன்?
ஆண்டவன், எம்.ஜி.ஆருக்குத் தந்திரங்களைக் கையாளும் உத்திகளைத் தந்திருந்தானேயன்றி, நிர்வாகத் திறமையை அருளவில்லை. ஆனால் கருணாநிதிக்கு  எல்லாத்தன்மைகளும் தமிழ்பற்றும் அளித்திருந்தான். ஆகவே நாம் கருணாநிதியுடன் செயல்பட்டோம். ஆதலால் தூதை மறுத்து அனுப்பிவிட்டோம்… அது எம்.ஜிஆருக்கு எம்மீது பெரும் வெறுப்பை  உற்பத்தி செய்து விட்டது.
ஆர்.எம். வீரப்பன் அப்போது அறநிலைய அமைச்சர். அவரை எம்.ஜி.ஆர் ஏவிவிட்டு எமக்கு ஏராளமான தொல்லைகள் கொடுத்தார். எம்மீது வழக்குகள் போட்டார். எம்மைப் பற்றி ஆபாசமாய், அவதுராய் அவர்கள் கையிலிருந்த ஒரு வார இதழில் எழுத வைத்தார். பூரணகும்பம், அரசுவிழா ஆகியவற்றில் கலந்து கொள்ள அழைப்பு விடக் கூடாது என்று தடைவிதித்தார். அரசு அதிகாரிகள் எம்முடன் கலந்து பேசத் தடை  போட்டார். உச்சமாக எம் சித்தாந்தக் கழகத்தில் எமக்கு எதிராகவே  குழப்பம் ஏற்படுத்தினார்.
அத்தனையையும் நாம் பொறுத்துக் கொண்டது திமுகவுக்காக! அத்தனையையும் எம்.ஜி.ஆர். எம்மீது திணித்தது யாம் தி.முக ஆதரவாளன் என்பதாலேயே!! எம்.ஜிஆர் எமக்குத் தந்த தொல்லைகளுக்குப் பின்புதான் நாம் திமுக வில் இன்னும்  தீவிரமாகப் பணியாற்றினோம். நிதி தந்தோம். அத்தனை உத்வேகமாகச் செயல்பட்ட நாம் திமுகவிலிருந்து விலகுவோமா?
ஆனாலும் [மீண்டும் மெளனம்] சமீபத்துத் தேர்தலில் நான் பணியாற்றக் கூடாது என்று கருணாநிதி தடை போட்டுவிட்டார். இது உண்மை! [மெளனம்]
 அப்படியா?
ஆமாம்! திண்டுக்கல் நிதி  அளிப்பு விழாவின் போது, நாம் எமது ஞானத்தின் அடிப்படையில் திராவிட  முன்னேற்றகழகம் பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றி வலுவான ஆட்சியை அமைக்கும் என்று   பேசினோம்.  அன்று  நாம் உத்வேகமாகப் பேசிய பேச்சைக் கேட்டு கருணாநிதி எம்மிடம், இனி தாங்கள்  அரசியல் பேச வேண்டாம்’’ என்று சொல்லிவிட்டார்.  அதைக்கேட்டு நாம் திடுக்கிட்டோம். அதை நம்மால் ஜீரணிக்க முடியவில்லை.
யாம்  பேசினால் அதனால் ஏற்படும் லாபம் கட்சிக்குத் தானே? ஏன் கருணாநிதி அப்படிச் சொன்னார் என்று யாம் பன்முறை யோசித்தோம். எம் வளர்ச்சியைப் பொறுக்காத சிலர், கருணாநிதிக்குத் தூபம் போட்டு, அவர் அந்த நினைப்பில் அப்படிச் சொல்லிவிட்டார். மனம் வெதும்பிப் போனோம். அதன் பின்னர் கருணாநிதியின் சொல்லுக்காக நாம் கட்சி மேடையில் ஏறவில்லை.
 தாங்கள் விரும்பியபடியே கருணாநிதி ஆட்சியைப் பிடித்துவிட்டார். ஆனால் தங்கள் அவரைப் பாராட்டிப் பேசவில்லையே?
[சற்று யோசனைக்குப் பின்] கருணாநிதி ஆட்சிக்கு வர வேண்டும் மென்பதில்  யாம் தீவிரக் கருத்துடன் தான் இருந்தோம். பேசினோம். எம்மைக் கருணாநிதி பேசவேண்டாம் என்று சொன்னதும் வருந்தினோமே தவிர, அவர்  மீது கொண்டுருந்த அன்பிலிருந்து நாம் சற்றும் மாறவில்லை.  பெரும்பான்மை இடங்களைக் கட்சி கைப்பற்றிக் கொண்டிருக்கும்போதே நாம் கருணாநிதியுடன் தொடர்பு கொள்ள முயன்றோம்.அவரது தொடர்பு கிடைக்கவில்லை.
ஒரு முறை அவரது உதவியாளர் சண்முகநாதனும்,இரண்டு முறை அவரது மனைவிமார்களுமே தொடர்பு  கொண்டு பேசினார்களே தவிர, அவருடன் பேச முடியவில்லை. நாம் தொடர்புகொண்ட செய்தி நிச்சயம் கருணாநிதிச் சென்றடைந்திருக்கும். ஆயினும் எமக்கு நன்றிக் கடிதம் கூட வரவில்லை. எம்மைப் பேச வேண்டாமென்று திண்டுக்கல்லில் அவர் சொல்லிவிட்ட பின்பும், எமக்கிடையில்  கடிதத்தொடர்பு இருந்தது. ஆனால் இன்று  அவர் எம்மைத் தவிர்த்து விடகாரணம்? [ஒரு நிமிட இடைவேளி] ஆனாலும் என் மனம் தி.முக வுக்காகப் பாடுபட்டதற்கு இன்புறுகிறது.
இன்றைய அமைச்சரவை குறித்து தங்கள் கருத்து?
நல்ல கேள்வி. நாம் எதிர் பார்த்த கேள்வி. கருணாநிதியின் 65ம் பிறந்த நாளின் போதே மேடையில், கலைஞரே அடுத்த முதல்வர். அவருடன் ஆட்சி ஏற்பவர்களை விசுவாசிகளாக ,நல்லவர்களாக,  மக்களுக்கு உதவும் மன்முள்ளவர்களாக, தியாகிகளாக, பேராசையற்றவர்களாகத் தேர்வு செய்யுங்கள்’’ என்று கேட்டுக் கொண்டோம். அவர்களால் மட்டுமே நல்லாட்சி செய்ய முடியும். ஆனால் இன்றிருக்கும் அமைச்சரவையில்  அப்படிப்பட்ட நல்ல அமைச்சர்கள் இல்லை என்றே யாம் என்னுகிறோம். எல்லோரும் தான் தோன்றிகளாகச் செயல்படுவார்கள். என்ன செய்வது? கருணாநிதி ஒரு சிலரின் பேச்சுக்கு செவி சாய்க்கின்றவராகிவிட்டார்.
ஆட்சியைக் கைப்பற்றிவிட்ட தி.முக. எப்படி அரசு இயந்திரத்தை இயக்க வேண்டுமென்று கருதுகிறீர்கள்?
இந்தக் கேள்வி எனது எண்ணத்தைப் பிரதிபலிக்கச் செய்யும் கேள்வி. ஆட்சியின் தலையாய இடத்தைப் பிடித்துவிட்டோம் என்ற மமதையில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ,கட்சிப் பிரமுகர்கள், அரசு அலுவலகங்களிலும், அதிகாரிகளிடமும் மற்றும் நீதித்துறையிலும் தலையிடல் கூடாது. தலையிடாவிட்டால் நிர்வாகம் சீர் தூக்கும். தலையிட்டால் தலைவிதிதான்!

More articles

Latest article