சென்னை: கோடநாடு விவகாரத்தில் என்னை குறி வைக்கிறார்கள்…’ என சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார். ‛குற்றவாளிகளுக்கு ஆஜரான வழக்கறிஞர்கள், தற்போது அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படுகினறனர் என்று திமுக மீது குற்றம் சாட்டியுள்ளார்.

கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம் இன்றைய சட்டமன்ற பட்ஜெட் விவாதத்தின்போது அமளியை ஏற்படுத்தியது. இதையடுத்து அவையில் இருந்து வெளிநடப்பு செய்த அதிமுகவினர், சட்டமன்ற வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது,
மறைந்த முன்னாள் முதல்வர், ஜெயலலிதா கோடநாடு சென்று ஓய்வெடுப்பது வழக்கம். அவரது மறைவுக்கு பிறகு, அங்கு நடைபெற்ற கொள்ளை முயற்சியின்போது பணியில் இருந்த காவலாளி கொலை செய்யப்பட்டுள்ளார். அந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. வழக்கு முடியும் நிலையில் உள்ளது. ஆனால், திமுக அரசு, திட்டமிட்டு, சயன் என்பவருக்கு சம்மன் அனுப்பி, அவரிடம் ரகசிய வாக்குமூலம் பெற்றதாக செய்தி வெளியாகி உள்ளது. அந்த செய்தியில், வழக்கை திசை திரும்பும் நோக்கில், என்னையும் சிலரையும் சேர்த்திருப்பதாக தகவல் வந்துள்ளது.
இந்த விவகாரத்ல், ஏற்கனவே புலன்விசாரணை செய்யப்பட்டுள்ள நிலையில், வரும் 23ம் தேதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது. முடியும் தருவாயில் உள்ள அந்த வழக்கை, திமுக அரசு மீண்டும் திட்டமிட்டு என்னையும், அதிமுகவினரையும் சிக்க வைக்க முயற்சி செய்கிறது. எங்களை அச்சுறுத்த பார்க்கிறது திமுக அரசு.
இந்த வழக்கில், குற்றவாளிகளுக்கு ஜாமீன்தாரர்களாக இருந்தவர்கள் திமுகவினர். திமுக வழக்கறிஞர் இளங்கோ தான் குற்றவாளிகளுக்கு ஆஜரானார். ஊட்டி நீதிமன்றத்திலும் திமுக வழக்கறிஞர்கள் தான் ஆஜராகினர்.
தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆட்சி மாற்றத்திற்கு பின் திமுக வழக்கறிஞர்களை அரசு வழக்கறிஞராக நியமித்துள்ளனர். குற்றவாளிகளுக்கு ஆஜரானவர்கள், தற்போது அரசு வழக்கறிஞர்களாக அவர்களுக்கு ஆதரவாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதுபோல, மூன்று முறை உயர்நீதிமன்ற நீதிபதிகள் இந்த வழக்கை விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளார்கள். ஆனால், அதை மீறி திமுக அரசு, என் மீதும், அமைச்சர்கள் மீதும் பழி சுமத்த திமுக இந்த ஏற்பாட்டை செய்கிறது.
மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாததால், அதை திசை திருப்பும் நோக்கில் எங்கள் மீது அவதூறு பரப்புகிறார்கள். ஆனால் அதிமுக அனைத்தையும் முறியடிக்கும். குற்றவாளிகளை பாதுகாத்து, அவர்களுக்கு துணை போகும் இந்த அரசாங்கம் எப்படி மக்களை பாதுகாக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.