சென்னை: கொடநாடு விவகாரத்தில் உண்மை குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என  சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

சட்டப்பேரவை இன்று காலை கூடியதும் பட்ஜெட் தொடர்பான விவாதங்கள் தொடங்கியது. அப்போது  எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி எழுந்து கொடநாடு விவகாரம் குறித்து  பேசினார். ஆனால், சபாநாயகர் அதற்கு அனுமதி வழங்காத நிலையில் தொடர்ந்து அனுமதி பெறாமல் அரசுக்கு எதிராக பதாகைகளை காட்டிய அதிமுக உறுப்பினர்கள் அவையில் கோஷங்களை எழுப்பினர். இதை சபாநாயகர் அப்பாவு கண்டித்ததால், அதிமுகவினர் பொய்வழக்கு போடாதே என்ற கோஷமுடன், பதாதைகளையும் காட்டி  வெளிநடப்பு செய்தனர்.

இதுகுறித்து அவையில் பேசிய முதல்வர், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கை, என் அப்பன் குதிருக்குள் இல்லையென இவர்களே கூறுவது போல உள்ளது. கொடநாடு கொலை, கொள்ளை சார்ந்த விவகாரத்தில், திமுக தேர்தல் களத்தில் கொடுத்த வாக்குறுதியை  நிறைவேற்றி வருகிறது. கொடநாட்டில்,  நள்ளிரவில் நடைபெற்ற கொள்ளை சம்பவம், அடுத்தடுத்த மரணங்கள், விபத்து மரணங்கள் மக்களுக்கு அப்போதே சந்தேகத்தை ஏற்படுத்தியது.

அதனால் தான் கொடநாடு கொள்ளை, கொலை. வழக்கு  விசாரிக்கப்பட்டு உண்மை குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என அப்போதே வாக்குறுதி கொடுத்தோம். அதன்படி, தற்போது  நீதிமன்றத்தில் அனுமதி பெற்று, எந்த அரசியல் நோக்கமும் இல்லாமல்  விசாரணை நடைபெற்று வருகிறது. எனவே இதில் அரசியல் தலையீடோ, பழிவாங்கும் எண்ணமோ இல்லை. விசாரணை நடைபெற்று வருகின்றது. அதில் கிடைக்கக்கூடிய தகவல்களின் அடிப்படையில் நிச்சயம் உண்மை குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் யாரும் பயமோ அச்சமோ கொள்ள  தேவையில்லை.

கொடநாடு வழக்கில் நீதிமன்றத்தின் அனுமதியை பெற்று நடைபெறும் விசாரணையில் களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் எதிர்க்கட்சித் தலைவர் கருத்துக்களைக் கூறியுள்ளதால் இந்த பதிலை அளிக்கிறேன் என்றார்.