சென்னை: சட்டப்பேரவையில்  இருந்து வெளிநடப்பு செய்தது ஏன் என்பது குறித்து எதிர்க்கட்சி தலைவர் ஓபிஎஸ் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார். அப்போது, பொய் வழக்குகளை போட்டு எதிர்க்கட்சிகளை நசுக்க திமுக அரசு முயற்சி செய்வதாக குற்றம் சாட்டினார்.

சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற பட்ஜெட் விவாதத்தின்போது, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கொடநாடு விவகாரம் குறித்து பேசினார். அப்போது, திமுக அரசு திட்டமிட்டு அதிமுகவினர் வழக்கு போடுவதாகவும், வேண்டுமென்றே பெரிதாகவும் குற்றம் சாட்டினார். அதற்கு முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்தார். இது தொடர்பான விவாதங்களைத் தொடர்ந்து, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள்  திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சட்டப்பேரவையில்  இருந்து  ‘பொய் வழக்கு போடாதே’ என்ற கோஷமிட்டனர்.  தமிழக அரசை கண்டிக்கும் விதமாக, அதிமுக உறுப்பினர்கள் அவை வாயில் அமர்ந்து முழக்கங்களை எழுப்பி எதிர்ப்பை பதிவு செய்தனர்.

இதையடுத்து சபாநாயகர் அப்பாவு அதிமுகவினரை வெளியேற்ற உத்தரவிட்டனர். அவைக்காவலர்கள் கூறியதையடுத்து அங்கிருந்து அதிமுக எம்எல்ஏக்கள் பொய் வழக்கு போடாரே என்ற பாதாதைகளுடன்  வெளியேறினர். தொடர்ந்து கூட்டணி கட்சியான பாஜகவினரும் பாமகவினரும் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

வெளிநடப்பு செய்த அதிமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியினர் தொடர்ந்து சட்டமன்ற வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களை அதிமுகவினர் சந்தித்தனர்.

அப்போது பேசிய ஓபிஎஸ், நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து மக்களை நம்பவைத்து ஏமாற்றி இன்று ஆட்சியில் உள்ளது திமுக. இந்த அரசு  மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணுவதில் அக்கறை காட்டவில்லை, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை பற்றி சிந்திக்காமல், எதிர்க்கட்சிகள் மீது பொய் வழக்குகளை போட்டு நசுக்க வேண்டும் என்ற திட்டத்தையே  கையில் எடுத்து செயல்பட்டு வருகிறது.

திமுக அரசின் நடவடிக்கைக்கு  கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சி தலைவர் சட்டப்பேரவையில் குரல் கொடுத்தார். ஆனால், அதற்கு வாய்ப்பு வழங்க மறுத்ததுடன், அவர் என்ன சொல்கிறார் என்பதை கேட்கக்கூட விரும்பாமல்,  திமுக அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது.  பொய் வழக்குகளை போட்டு அதிமுகவை செயல்படவிடாமல் இருக்க திட்டம் தீட்டுகின்றனர். அது பொய்யான வழக்கு என்று மக்களுக்கு தெரியும். இதற்காக அதிமுக அஞ்சாது,  எங்களுடைய ஜனநாயக கடமைகளை நாங்கள் தொடர்ந்து ஆற்றிக்கொண்டிருக்கிறோம்.

திமுக அரசின் செயல்பாடுகளை கண்டித்து இன்றும் நாளையும் சட்டமன்றத்தை புறக்கணிக்கிறோம்.

இவ்வாறு ஓபிஎஸ் கூறினார்.