சென்னை: தற்போது நடந்து முடிந்துள்ள சட்டமன்ற இடைத்தேர்தல்களின் மூலம், திமுக கடந்த 1996ம் ஆண்டிற்கு பின்னர், முதன்முறையாக சட்டமன்றத்தில் 3 இலக்க இடங்களைப் பெற்றுள்ளது.

கடந்த 1957ம் ஆண்டு முதல் 2016 வரை திமுக பங்கேற்ற 14 தமிழக சட்டமன்ற தேர்தல்களில், வெறும் 4 முறைகள் மட்டுமே திமுக சட்டமன்றத்தில் 3 இலக்க இடங்களில் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

1967ம் ஆண்டு தேர்தலில் 137 இடங்களிலும், கடந்த 1971ம் ஆண்டு தேர்தலில் 184 இடங்களிலும், 1989ம் ஆண்டு தேர்தலில் 150 இடங்களிலும், 1996ம் ஆண்டு தேர்தலில் 173 இடங்களையும் பெற்றது திமுக.

மற்றபடி, 1991ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் தவிர, அனைத்திலும் 2 இலக்க இடங்களையேப் பெற்றது அக்கட்சி. 2006ம் ஆண்டு கூட்டணியின் உதவியோடு ஆட்சியில் அமர்ந்தபோதும்கூட, திமுக பெற்றிருந்த இடங்கள் வெறும் 96 மட்டுமே.

அந்த வகையில், 23 ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழகத்தின் குறிப்பிடத்தக்க பழைய கட்சியான திமுக, சட்டமன்ற இடைத்தேர்தல்களின் மூலம் 101 இடங்களைப் பெற்று 5வது முறையாக 3 இலக்க இடங்களைப் பெற்றுள்ளது.

சட்டமன்ற தேர்தல்களில் பலமுறை தோல்விகளை சந்தித்தாலும், சட்டமன்ற தேர்தல் சாதனைகளை திமுகவே நிகழ்த்தியுள்ளது என்பதையும் மறந்துவிட முடியாது.

கடந்த 1971ம் ஆண்டு திமுக வென்ற 184 இடங்கள் என்ற சாதனையை இதுவரை எந்தக் கட்சியும் முறியடிக்கவில்லை.

முதலிடம் மட்டுமல்ல, இரண்டாமிட சாதனையும் திமுகவிற்கே. கடந்த 1996ம் ஆண்டு திமுக பெற்ற 173 இடங்கள் என்ற சாதனையும் இதுவரை முறியடிக்கப்படவில்லை.

ஆளுங்கட்சியாக இரண்டு சாதனைகளை செய்துள்ளது என்றால், எதிர்க்கட்சி வகையிலும் 2 சாதனைகளை செய்துள்ளது திமுக.

கடந்த 2016ம் ஆண்டு தேர்தலில், 89 இடங்களைப் பெற்று சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக அமர்ந்தது திமுக. தமிகத்தில் அவ்வளவு அதிக உறுப்பினர்களுடன் எதிர்க்கட்சி வரிசையில் முதன்முறையாக அமர்ந்தது திமுக மட்டுமே.

பின்னர் தற்போது, தனது இடங்களை 101 என்பதாக அதிகரித்துக் கொண்டு, இப்போதும் எதிர்க்கட்சியாக இருக்கிறது. இதுவும் முக்கியமானதொரு சட்டமன்ற சாதனை. ஆக, இந்த விஷயத்திலும் முதல் 2 இடங்களை திமுகவே வைத்துள்ளது.

– மதுரை மாயாண்டி