சென்னை:
குட்கா ஊழல் வழக்கை நேர்மையாக விசாரித்து வந்த ஜெயக்கொடி ஐஏஎஸ் அதிகாரியை தமிழக அரசு வேறு துறைக்கு மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் தமிழக அரசு வரும் 29ந்தேதிக்குள் பதில் அளிக்க உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உளளது.
தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா போன்ற போதை பொருள்கள் விற்பனைக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருந்தால், இந்த பொருட்களின் விற்பனை அமோகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்த போதை பொருட்களை தடைமீறி விற்பனை செய்ய ரூ.40 கோடி வரை லஞ்சம் கை மாறியதாக கூறப்பட்டது. இதுகுறித்த வழக்கில், குட்கா ஊழல் குறித்து விசாரணை அதிகாரி நியமித்து விசாரணை நடத்த தமிழக அரசுக்கு உத்தரவிட்டார். அதன்படி ஐஏஎஸ் அதிகாரி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், விசாரணை அதிகாரி ஜெயக்கொடி மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக புதிய அதிகாரியாக மோகன் பியாரேவை தமிழக அரசு நியமித்தது.
இதை எதிர்த்து திமுக சார்பில் சென்னை ஐகோர்ட்டில், கடந்த 6ந்தேதி வழக்கு தொடரப்பட்டது. மனுவில், நேர்மையாக விசாரணை நடத்தி வந்த ஜெயக்கொடியை மீண்டும் ஊழல் கண்காணிப்பு ஆணையராக மாற்றம் செய்ய வேண்டும். அதேபோல் அப்பதவிக்கு தமிழக அரசால் புதிதாக நியமிக்கப்பட்ட மோகன் பிராரேவின் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனுமீதான விசாரணை இன்று நடைபெற்றது. விசாணையை தொடர்ந்து, ஊழல் கண்காணிப்பு ஆணையர் ஜெயக்கொடி மாற்றப்பட்டது குறித்துவரும் 29ம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.