சென்னை: பல்வேறு குற்றச்சாட்டுக்களில் சிக்கியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோர் மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

திமுகவில் செந்தில் பாலாஜி உள்பட அமைச்சர்கள் உள்பட முக்கிய நபர்கள் பலர்மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இது மக்களிடையே திமுக மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கி உள்ளது. இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக, திமுக மாநிலங்களவை உறுப்பினர் கிரி ராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் , முன்னாள் அதிமுக அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி, தங்கமணி, சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.காமராஜ், கே.சி.வீரமணி, கே.பி.அன்பழகன், எடப்பாடி பழனிசாமியின் உறவினர் சேலம் இளங்கோவன், அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சத்யா ஆகியோருக்கு எதிராக தனித்தனியாக வழக்குகளை தாக்கல் செய்துள்ளார்.
அவரது மனுவில், இவர்கள்மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளன. முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி அமைச்சராக இருந்தபோது, சாலைகள் அமைப்பதில் முறைகேடுகள் நடைபெற்றதாக வழக்கு, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு, எல்இடி வாங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக வழக்கு ஆகியன லஞ்சு ஒழிப்புத் துறையால் பதிவு செய்யப்பட்டதாக சுட்டிக்காட்டி உள்ளார்.
இதேபோல், அதிமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த தங்கமணி, கே.பி அன்பழகன், முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர், உணவுத் துறை அமைச்சராக இருந்த காமராஜ் , சி.விஜயபாஸ்கர், கே.சி வீரமணி உள்ளிட்டோர். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. முன்னாள் அதிமுக எம்எல்ஏ சத்யா மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு, சேலம் இளங்கோவன் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்குகளின் விசாரணை நிலுவையில் உள்ளது என்பதை சுட்டிக்காட்டி உள்ளார்.
மேலும், இவர்கள்மீதான வழக்கில், லஞ்ச ஒழிப்புத்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துவிட்டால் அந்த குற்றம் தொடர்பான வழக்கை தொடர முடியும் என்று சட்டவிரோத பண பரிமாற்றச் சட்டத்தில் தெளிவு படுத்தப்பட்டுள்ளது. அதனால், அவர்கள்மீது வழக்கு தொடர அனுமதி வழங்கப்படி கோரப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]