சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியை  கொலை செய்து கொலையாளிகளின் விடுதலையை சிலர்  திருவிழாவாக கொண்டாடுவதை பார்க்கும்போது, இதயத்தில் இருந்து ரத்த கண்ணீர் வருகிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 31வது நினைவுநாள் நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி, பிரியாங்கா காந்தி உள்பட பலர் மரியாதை செய்தனர். இந்த நிலையில், சென்னை அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவகாந்தி நினைவிடத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் காங்கிரசார்  மலர் தூவி மரியாதை செலுத்தினார், பின்னர் பெங்களூரு, கேரளா மற்றும் வடசென்னை கிழக்கு ஆகிய இடங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட ராஜிவ் ஜோதிக்களை பெற்றுக்கொண்டார், அதை தொடர்ந்து மருத்துவ முகாமினை துவக்கி வைத்து பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழியை வாசித்து தேசிய தோழர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

பின்னர்  செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பிசைய அவர், இன்றைக்கு ஒருசில துரோக கும்பல் எப்படி மகாத்மா காந்தியை வீழ்த்தினால்தான், தங்களுடையை சிந்தனைகளை, சித்தாந்தத்தை நிலைநிறுத்தலாம் என கருதி கொன்றார்களோ, அதே போல தான் ராஜீவ் காந்தியை கொன்றால்தான் தங்களால் வெற்றி பெற முடியும் என கருதினர். ஆனால், அவர்களது கற்பனையில் மண் விழுந்தது.

“ராஜிவ் காந்தி கொலை செய்யப்பட்ட போது எங்கள் கண்களிலிருந்து கண்ணீர் ஆறாக ஓடியது. தற்போது அவரை கொன்ற கொலையாளிகளின் விடுதலையைத் திருவிழாவாகக் கொண்டாடும் போது இதயத்திலிருந்து ரத்தக் கண்ணீர் வடிகிறது. எங்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நாங்கள் கதறுகிறோம். கண்ணீர் விடுகிறோம். மனிதாபிமானத்தோடு வாழ்வதுதான் மனிதத்தன்மை. பழிவாங்குவது மனிதத்தன்மை இல்லை. மிருகங்களுக்குக் கூட பழிவாங்கும் எண்ணம் கிடையாது”  என வேதனை தெரிவித்துள்ளார்.