மெல்போர்ன்

பிரபல டென்னிஸ் வீரர் ஜோகோவிச் விசா ரத்துக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம்  தடை விதித்துள்ளது.

வரும் 17 ஆம் தேதி முதல் ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் போட்டிகள் தொடங்குகின்றன.  இதில் கலந்துக் கொள்ள உலகின் டென்னிஸ் நம்பர் ஒன் வீரரும், 9 முறை ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்றவருமான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் விமானம் மூலம்  கடந்த புதன்கிழமை மெல்போர்ன் நகரை வந்தார்.

ஏற்கனவே அவர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டாரா இல்லையா என்பதைத் தெரிவிக்க மறுத்திருந்தார். தவிர அவரிடம் மருத்துவ விதிவிலக்கு பெறுவதற்குத் தேவையான ஆவணங்கள் இல்லாததால் ஆஸ்திரேலியாவிற்குள் நுழைய அதிகாரிகள் அனுமதி மறுத்தனர். ஆஸ்திரேலிய அரசு அவரது விசாவை ரத்து செய்தது.

இதையொட்டி அவர் மெல்போர்ன் விமான நிலையத்தில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.  தவிர விசா ரத்து செய்யப்பட்டதால் வியாழக்கிழமை முதல் ஜோகோவிச் ஹோட்டல் தனிமைப்படுத்தல் காவலில் வைக்கப்பட்டார்.

தமது விசா ரத்துக்கு எதிராக மெல்போர்னில் உள்ள நீதிமன்றத்தில் ஜோகோவிச் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.  நோவக் ஜோகோவிச் விசா ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய 11 காரணங்களை அவரது வழக்கறிஞர்கள் சமர்ப்பித்தனர்.

வழக்கறிஞர்கள் டிசம்பரில் ஜோகோவிச்சிற்கு கடுமையான பெரிய நோய் இருந்ததாக எந்த தரவும் இல்லை என்றும் இது தொடர்பான அவரிடம் நடத்தப்பட்ட சோதனை முடிவுகளையும் நீதிமன்றத்தில் வழங்கினர்.

வழக்கை விசாரித்த நீதிபதி அந்தோனி கெல்லி,  ஜோகோவிச் விசாவை ரத்து செய்த உத்தரவிற்குத் தடை விதித்தார்.  இந்த வழக்கில் டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச், வெற்றி பெற்றுள்ளதன் மூலம் ஆஸ்திரேலிய ஒபன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச் பங்கேற்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

 இது குறித்து நோவக் ஜோகோவிச் நான் எனது விசா ரத்துக்குத் தடை விதித்து நீதிபதி தீர்ப்பளித்ததால் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளேன்.  நீதிபதிக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.   என்ன நடந்தாலும் நான் இங்கு தங்கி போட்டியில் கலந்து கொள்ளவே விரும்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.