சென்னை: தீபாவளி பண்டிகையொட்டி, புத்தாடை மற்றும் பொருட்கள் வாங்க பொதுமக்கள், வணிக நிறுவனங்கள் அதிகம் உள்ள தி.நகர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை, குரோம்பேட்டை போன்ற பகுதிகளில் அலைமோதுவதால், பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. சென்னையில் மட்டும் 18ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருவதாக காவல்துறை தெரிவித்து உள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு  பொதுமக்கள் புத்தாடைகள் வாங்க தியாகராயர் நகர், பாண்டிபஜார், புரசைவாக்கம், மயிலாப்பூர், பூக்கடை, வண்ணாரப்பேட்டை, கோயம்பேடு, புரசைவாக்கம், குரோம்பேட்டை, பாடி உள்பட பல பகுதிகளில் குவிந்து வருகின்றனர். இதனால் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறத. இதை கட்டுப்படுத்தும் வகையில்,  காவல்துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.  கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துதல், குற்ற தடுப்பு முறைகள் போக்குவரத்தை நெரிசல் ஏற்படாமல் வாகனங்களை ஒழுங்குப்படுத்துதல் போன்றவற்றிற்காக  பல்வேறு இடங்களில் தற்காலிக கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு கண்காணித்து வருகின்றனர். இதற்காக சுமார் 18 ஆயிரம் போலீசார் சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் மருத்துவ குழுவினர்கள் அடங்கிய 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் தீயணைப்பு வீரர்களுடன் தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.