இந்த ஆண்டு பட்டாசு விலை 30சதவிகிதம் உயர்வு! பொதுமக்கள் கவலை…

Must read

சென்னை:

ன்னும் ஒரு வாரத்தில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில்,  பட்டாசுகளின் விலை 30 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் கவலை அடைந்து உள்ளனர்.

பட்டாசு தயாரிக்கவும் வெடிக்கவும் உச்சநீதிமன்றம், மாசு கட்டுப்பாட்டுவாரியம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால், சிவகாசியில் பட்டாசு தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.  ஏராளமான பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளதால் பெரும்பாலான தொழிலாளர்கள் மாற்று வேலை தேடி சென்றுவிட்டனர். மேலும் பசுமைப் பட்டாசு தயாரிப்பது குறித்த தெளிவான வழிகாட்டுதல் இல்லாத நிலையில் பட்டாசுகளின் விலை அதிரடியாக உயர்ந்து உள்ளது.

ஆண்டுக்கு ஆண்டு பட்டாசு விலை உயர்ந்தாலும,  என்ன விலை கொடுத்தாவது பட்டாசு வாங்கி வெடிக்கா விட்டால் தீபாவளி நிறைவடையாது என்பது மக்களின்  வழக்கம். ஆனால், இந்த ஆண்டு பட்டாசு தொழிலுக்கு தேவையான மூலப்பொருட்கள் விலை உயர்வு, ஆட்கள் பற்றாக்குறை போன்ற காரணங்களால்,  பட்டாசுகள் உற்பத்தி செய்யும் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தட்டுப்பாடு காரணமாக பட்டாசுகளின் விலை சுமார் 30 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு பசுமைப்பட்டாசு மற்றும் பட்டாசு தொழில் மீதான  கடுமையான கெடுபிடிகள் காரணமாக சுமார் 3 மாதங்களாக வேலைநிறுத்தம் செய்தன. இதனால் பட்டாசு ஆலைகளை நம்பியிருந்த ஆயிரக்கணக்கான நேரடி தொழிலாளர்கள் பலர் பிழைப்பு தேடி வெளியூர்களுக்கு சென்று விட்டனர்.

இந்த நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி, கடந்த ஏப்ரல் முதல் பட்டாசு ஆலைகள் மீண்டும் திறக்கப்பட்டு வழக்கம் போல பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் வெளியூருக்கு சென்ற ஏராளமான தொழிலாளர்கள் சிவகாசி திரும்பாமல் அங்கேயே தங்கி விட்டனர். இதன் காரணமாக பட்டாசு ஆலைகளில் தற்போது ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக தேவையான அளவு பட்டாசு தயாரிக்க முடியாத நிலையிலும், கடுமையான கட்டுப்பாடுகள் கரணமாக, பட்டாசு ஆலைகள் பட்டாசுகளின் விலையை சுமார் 30 சதவீதம் வரை உயர்த்தியுள்ளன.  மேலும் எப்போதும் போல இந்த ஆண்டு அதிகளவில் பட்டாசுகளை உற்பத்தி செய்ய இயலவில்லை என்று பெரும்பாலான ஆலைகள் குற்றம் சாட்டி உள்ளன.

பட்டாசு விலை உயர்வால் பொதுமககள் கவலையடைந்து உள்ளனர். அதே வேளையில், தமிழகம் முழுவதும் பரவலாக பெய்து வருவதால், பட்டாசு விற்பனை எப்படி இருக்குமோ என்று பட்டாசு ஆலை நிறுவனங்களும், விற்பனையாளர்களும் கவலை அடைந்து உள்ளனர்.

More articles

Latest article