சென்னை:  தீபாவளியை பண்டிகையை முன்னிட்டு அரசு அதிகாரிகள் வசூல் வேட்டையில் இறங்கியுள்ள நிலையில், லஞ்ச ஒழிப்பு காவல்துறை யினர் மாநிலம் முழுவதும் முக்கிய அரசு அலுவலகங்களில்  அதிரடி ரெய்டு நடத்தினர். 46 அரசு அலுவலகங்களில் நடத்தப்பட்ட ரெய்டில், ரூ.1.12 கோடிபறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. ஆனால், இதுதொடர்பாக லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் யாரும் கைது செய்யப்படவில்லை.

இன்னும் ஒரு வாரத்தில் தீபாவளி பண்டிகையை கொண்டாடப்பட உள்ள நிலையில், பல்வேறு துறை சார்ந்த அரசு அதிகாரிகள், வியாபார நிறுவனங்கள், தொழிற்நிறுவனங்களுக்கு தீபாவளி பணம் கேட்டு வசூல் வேட்டையாடி வருகின்றனர். இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஏராளமான புகார்கள் வந்த நிலையில்,  லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்த  அதன் இயக்குநர் கந்தசாமி உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்த, தொடர்ந்து ஐஜிக்கள் துரைக்குமார், பவானீஸ்வரி, டிஐஜி லட்சுமி, எஸ்பிக்கள் விமலா, மயில்வாகணன், சியாமளா, சண்முகம் ஆகியோர் கொண்ட படையினர் மாநிலம் முழுவதும்  ஒரே நேரத்தில் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.

பத்திரப்பதிவு, ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்துறை, தொழில்துறை, வட்டார போக்குவரத்து துறை, நெடுஞ்சாலைத்துறை, வனத்துறை, வணிக வரித்துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம், தீயணைப்புத்துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், தமிழ்நாடு நகரப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், நகர ஊரமைப்புத்துறை, வேளாண்மைத்துறை, மதுபானம் மற்றும் ஆயத்தீர்வைத்துறை, மதுவிலக்கு அமலாக்கத்துறை ஆகிய 16 துறைகளில் உள்ள 46 அரசு அலுவலகங்களில்  இந்த சோதனை நடத்தப்பட்டது.

இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ. 1கோடியே 12 லட்சத்து 57 ஆயிரத்து 803 ரூபாய் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதன்படி,

திருவாரூர் கோட்ட பொறியாளர் தங்கியுள்ள நெடுஞ்சாலை விருந்தினர் விடுதியில் இருந்து மட்டும் கணக்கில் காட்டப்படாத ரூ.75 லட்சம் இருந்தது பறிமுதல் செய்யப்பட்டது.

நாமக்கல் நெடுஞ்சாலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் ரூ.8.77 லட்சம், விருதுநகர் ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் ரூ.6.67 லட்சம்,

கள்ளக்குறிச்சி விவசாயத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் ரூ.4.26 லட்சம்,

திருநெல்வேலி மாவட்ட தொழில்துறை மையத்தில் ரூ.3.55 லட்சம்,

கிருஷ்ணகிரி போக்குவரத்து சோதனை சாவடியில் ரூ.2.25 லட்சம்,

திருவண்ணாமலை பிடிஓ அலுவலகத்தில் ரூ.1.31 லட்சம்,

ஈரோடு கோபிசெட்டிபாளையம் ஆர்டிஓ அலுவலகத்தில் ரூ.1.27 லட்சம்,

நாகப்பட்டினம் பிடிஓ அலுவலகத்தில் ரூ.1.19 லட்சம்,

திருப்பத்தூர் மதுவிலக்கு மற்றும் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ரூ1.01 லட்சம்,

கடலூர் டாஸ்மாக் மேனேஜர் அலுவலகத்தில் ரூ.94 ஆயிரம்,

பெரம்பலூர் தாலுகா அலுவலகத்தில் ரூ.60 ஆயிரம்,

பொன்பாடி சோதனை சாவடியில் ரூ.58 ஆயிரம்,

வேலூர் கே.வி.குப்பம் பதிவுத்துறை அலுவலகத்தில் ரூ.55 ஆயிரம்,

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி தாலுகா அலுவலகத்தில் ரூ.80 ஆயிரம் 

மேலும் மதுரை, சிவகங்கை, கோவை, கரூர், சேலம், புதுக்கோட்டை, தூத்துக்குடி, தர்மபுரி, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி பணம் மற்றும் ஆவணங்களை கைப்பற்றினர்.

தமிழகம் முழுவதும் இந்த சோதனை தொடரும் என்று லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், லஞ்ச பணம் கைது செய்யப்பட்டது தொடர்பாக இந்த ஒரு அதிகாரிகளும் கைது செய்யபடவில்லை. இது சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது. கண்துடை நாடகமாக டிபிஏசி ரெய்டு நடத்தி வருவதாக நெட்டிசன்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.