சென்னை: பாஜகவினரின் டிவிட்டர் கலந்துரையாடலில்  தெலுங்கான ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜ;ன கலந்துகொண்டது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. மரபை மீறி ஆளுநர் ஒருதலைப்பட்சமாக நடந்துகொண்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், அரசியலமைப்புச் சட்ட பதவியான ஆளுநர் பொறுப்பை வகிப்பவர். இதனால் அவர் கட்சி சார்பற்றவராக செயல்பட வேண்டும். அரசியலமைப்புச் சட்ட பதவியை வகிக்கும் ஆளுநர்கள், கட்சி சார்பு கொண்டவராகச் செயல்படக்கூடாது என்பது சட்டம் வழங்கும் விதி.

ஆனால், நமது நாட்டின் சாபக்கேடு, மத்தியில் எந்தவொரு கட்சி ஆட்சிக்கு வருகிறதோ, அந்த கட்சியைச் சேர்ந்தவர்களையோ, அவர்களது ஆதரவாளர்களையோத்தான், மாநில அரசின் கவர்னராக நியமித்து வருகிறது. இதில், பல மாநிலங்களில் ஆளுநருக்கும் அரசுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. இதனால் மாநில அரசின் திட்டங்கள் செயல்படுத்த முடியாத நிலையும் ஏற்படுகிறது.

இதுபோன்ற சூழலில்தான், முன்னாள் தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன், தற்போது தெலுங்கான மாநில ஆளுநராக இருந்து வரும் நிலையில், தனது ஆளுநர் பதவிக்கான மரபை மீறி பாஜகவினர் நடத்திய  டிவிட்டர் ஸ்பேசஸ் மீட்டிங்கில்  பங்கேற்றது கடுமையான  விமர்சனங்களைக் கிளப்பியுள்ளது.

பாஜகவினர் டிவிட்டர் ஸ்பேசில், 2024 தேர்தலில் தென்னிந்தியாவுக்கான பாஜகவின் வியூகம் பற்றி ஒரு கலந்துரையாடலை நடத்தினர். இந்த கலந்துரையாடலில், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனும் பங்கேற்று பாஜக ஏஜெண்ட் போல செயல்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

தெலுங்கானா மாநில அரசு நிறைவேற்றிய மசோதாக்களை கிடப்பில் போட்டுவிட்டு, பாஜக நிகழ்ச்சிகளில் ஆளுநர் பிஸியாக இருக்கிறார் என அங்குள்ள கட்சிகள் விமர்சித்து உள்ளன. சமூக வலைதளங்களில் சமூக ஆர்வலர்கள், அரசியல் நிபுணர்கள், தமிழிசையின் நடவடிக்கையை கடுமையாக விமர்சித்து கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

பாஜக நடத்தும் கூட்டங்களில் ஒரு மாநலி ஆளுநர் பங்கேற்பது ஆளுநர் பதவிக்கே இழுக்கு என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.