போபால்

த்தியப்பிரதேச முதல்வர் சவாலை ஏற்று வெல்வதற்கு கடினமான தொகுதியில் நின்று வென்று காட்டுவதாக திக் விஜய் சிங் ஒப்புக்கொண்டுள்ளார்.

மத்திய பிரதேச முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான திக் விஜய் சிங் தற்போது நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் போட்டியிட உள்ளார். இது குறித்துமத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத், ”திக்விஜய் சிங் அவர் விரும்பும் தொகுதியை தேர்ந்தெடுத்து அதில் போட்டியிடலாம். நான் அவரிடம் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன்.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் தொடர்ந்து காங்கிரசால் போட்டியிட முடியாத மூன்று அல்லது நான்கு தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் காங்கிரஸ் கடந்த 30 முதல் 35 வருடங்களாக வெற்றி பெறாமல் உள்ளன. இது போல ஒரு தொகுதியை அவர் தேர்ந்தெடுத்து வெற்றி பெறலாம் என கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்தார்.

இதற்கு திக்விஜய் சிங் தனது டிவிட்டரில், “என்னை மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் வெல்ல முடியாத இடத்தில் நின்று வெற்றி பெற அழைத்த கமல் நாத்துக்கு நன்றி. எனக்கு அந்த அளவுக்கு திறமை உள்ளதாக அவர் எண்ணியமைக்கு எனது மனமார்ந்த நன்றி” என பதில் அளித்துள்ளார்.

அதைத் தொடர்ந்து மேலும், ”கடந்த 1977 ஆம் வருடம் ஜனதா அலை அடித்த நேரத்தில் நான் மக்கள் ஆதரவால் ராகோகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளேன். சவாலை ஏற்றுக் கொள்வது எனது வழக்கம்.  கட்சித் தலைவர் ராகுல் காந்தி என்னை எந்த தொகுதியில் இருந்து போட்டியிட சொல்கிறாரோ அந்த தொகுதியில் இருந்து மக்களவை தேர்தலில் போட்டி இட நான் தயாராக உள்ளேன்”என பதிந்துள்ளார்.