லக்னோ: உத்தரபிரதேச ஆளுநருக்கு சம்மன் அனுப்பிய மாஜிஸ்திரேட் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அரசியல் சாசன பதவி வகிக்கும் ஆளுநருக்கு, விதியை மீறி சம்மன் அனுப்பப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அரசியல் சாசன பதவி வகிக்கும் ஆளுநருக்கு நோட்டீசோ, சம்மனோ அனுப்ப முடியாது என்பதால், சம்மன் அனுப்பிய நீதிபதி இடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம் படான் மாவட்டத்தில் ரூ.12 லட்சம் இழப்பீடு அளித்து அரசு சார்பில் நிலம் கையகப்படுத்தப்பட்டதாகவும், இந்த இடத்தை போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி செய்து அரசுக்கு அளித்ததாகவும் கூறி சந்திரஹாஸ் என்பவர், அம்மாநில ஆளுநரான ஆனந்தி பட்டேல் மீது குற்றம் சாட்டி மனு தாக்கல் செய்தார்.

அவரது மனுவில், இந்த நிலம் கையகப்படுத்தப்பட்ட விவகாரத்தில், மாநில ஆளுநர் ஆனந்திபென் படேலையும் ஒரு தரப்பாக  சேர்க்க வலியுறுத்தி இருந்தார். இந்த மனவை விசாரித்த மாவட்ட நீதிபதி,  மனு தொடர்பாக  விளக்கம் அளிக்க, அம்மாநில ஆளுநர் ஆனந்தி பென்னுக்கு சம்மன் அனுப்பினார். மேலும்,  வழக்கு தொடர்பாக ஆளுநர் கோர்ட்டில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறும் அதில் உத்தரவிட்டு இருந்தார்.

மாவட்ட நீதிபதியின் இந்த செயல் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. இதற்கு ஆளுநர் அலுவலகம் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால், அதற்கு பதில் கூறிய நீதிபதி,  எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறக் கூடாது என்று என்பதற்காகவே சம்மன் அனுப்பியதாக கூறினார்.

இதைத்தொடர்ந்து,  ஆளுநர் மாளிகை தரப்பில் மாவட்ட நீதிபதி மனோஜ் குமாருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அரசியல் சாசன பதவி வகிக்கும் ஆளுநருக்கு நோட்டீசோ, சம்மனோ அனுப்ப முடியாது என்பதும் அதில் சுட்டிக்காட்டப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து துணை மண்டல மாஜிஸ்திரேட் வினீத் குமார்,  மாவட்ட நீதிபதி மனோஜ் குமாரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.