சென்னை:

காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் நியமனம் தொடர்பாக டெல்லியில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தியை தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி சந்தித்து பேசினார்.

மாவட்ட காங்கிரஸ் கட்சித்தலைவர்களை மாற்றுவது தொடர்பாக கடந்த 26ந்தேதி சென்னையில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமையகமான  சத்தியமூர்த்தி பவனில் மாவட்டத் தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய அழகிரி, அரசியல் பண்ணுவதற்கு என்னென்ன தகுதிகள் வேண்டும், எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்பது பற்றியெல்லாம் விரிவாகப் பேசிவிட்டு, ‘விரைவில் மாவட்டத் தலைவர்களை எல்லாம் மாற்றப் போகிறோம்’ என்றும் தெரிவித்தார்.

இதையடுத்து, டெல்லி சென்ற கே.எஸ்.அழகிரி அங்கு முகாமிட்டு மூத்த தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார். இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் சோனியா காந்தியையும், முன்னாள் தலைவர் ராகுல் காந்தியையும் சந்தித்திருக்கிறார். இது தமிழக காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே தமிழக காங்கிரஸ் கட்சியில், தலைவர்கள் மாறும்போது, மாவட்டத் தலைவர்களும் மாற்றப்படுவது வாடிக்கையானது. தலைவர்களுக்கு பிடித்தமானவர்களே மாவட்டத் தலைவர்களாகவும் பதவி பெறுவார்கள். ஏற்கனவே  ஈவிகேஸ் இளங்கோவன் மாநிலத் தலைவராக இருந்தபோது நியமிக்கப்பட்ட மாவட்டத் தலைவர்களை , தான் பொறுப்புக்கு வந்ததும் திருநாவுக்கரசர் மாற்றிவிட்டு தன் ஆதரவாளர்களை நியமித்தார்.

இந்த நிலையில், தற்போது,  பழைய மாவட்டத் தலைவர்களை மாற்றிவிட்டு புதிய மாவட்டத் தலைவர்களை நியமிக்க முடிவு செய்துள்ளதாகவும், அதற்காக அழகிரி டெல்லியில் முகாமிட்டு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.