சென்னை: ஏப்ரல் 23ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத்தேர்தலுக்கான வாக்காளர் தகவல் சீட்டு விநியோகம் தொடங்கியது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு மற்றும் மேற்குவங்கத்தில் (முதற்கட்டம்) 2026 ஏப்ரல் 23 (வியாழன்) அன்று நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவுக் கான வாக்காளர் தகவல் சீட்டுகள் விநியோகம் செய்யும் பணியை தலைமைத் தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. இந்த வாக்காளர் தகவல் சீட்டுகளில் வாக்காளர்களின் விவரங்கள் வாக்குச்சாவடி மையம் அமைந்துள்ள இடம், வாக்குப்பதிவு நாள் மற்றும் நேரம் மற்றும் வாக்குப்பதிவு நாள் அன்று வாக்காளர் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை போன்ற விவரங்கள் இடம் பெற்றுள்ளது. மேலும், வாக்காளர் விவரங்களை விரைவாக கண்டறிவதற்கான கியூஆர் குறியீடும் இடம் பெற்றுள்ளது.

இந்த வாக்காளர் தகவல் சீட்டு வாக்குச்சாவடி மையத்தில் கூட்டத்தை குறைத்து விரைவாக வாக்குப்பதிவு நடைபெற உதவும். வாக்காளரின் பகுதி எண் மற்றும் வரிசை எண் தெளிவாக வாசிக்கக் கூடிய அளவில் இடம் பெற்றுள்ளது.

இந்த வாககாளர் தகவல சீட்டு விநியோகத்தை வாக்குச்சாவடி நிலை அதிகாரி வீடு வீடாகச் சென்று வாக்காளர்களுக்கு விநியோகிக்கும் பணி நடைபெற்று வருகிறது.  அனைத்து வாக்காளர்களுக்கும் வாக்குப்பதிவு நாளுக்கு குறைந்தது 5 நாட்களுக்கு முன்பாக இந்தச் சீட்டு வழங்கும் நடைமுறை நிறைவுபெற்றுவிடும்.

வாக்காளர் தகவல் சீட்டு அடையாள ஆவணமாக எடுத்துக்கொள்ளப்படாது.

வாக்காளர்கள் 12 அங்கீகரிக்கப்பட்ட அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி வாக்களிக்கலாம்.

பதினைந்தாவது தமிழக சட்டமன்றத் தேர்தலாக இருந்தாலும் சரி, நாடாளுமன்றத் தேர்தலாக இருந்தாலும் சரி, வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்து, உங்களிடம் வாக்காளர் அடையாள அட்டை இல்லையென்றால் கவலைப்படத் தேவையில்லை.

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி, வாக்காளர் அடையாள அட்டைக்கு மாற்றாகப் பின்வரும் 12 அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைக் காட்டி நீங்கள் தாராளமாக வாக்களிக்கலாம்:

வாக்களிக்கத் தேவையான மாற்று ஆவணங்கள்:

ஆதார் அட்டை

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பணி அட்டை

புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது தபால் நிலைய கணக்குப் புத்தகங்கள்

தொழிலாளர் நல அமைச்சகத்தின் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவக் காப்பீடு ஸ்மார்ட் கார்டு

ஓட்டுநர் உரிமம்

பான் கார்டு

தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் (NPR) இந்தியப் பதிவாளர் ஜெனரலால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு

இந்தியக் கடவுச்சீட்டு

புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்

மத்திய/மாநில அரசு ஊழியர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை

நாடாளுமன்ற/சட்டமன்ற/சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ அடையாள அட்டைகள்

இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் வழங்கப்பட்ட தனித்துவமான மாற்றுத்திறனாளி அடையாள அட்டை

பட்டியலில் பெயர் கட்டாயம்: மேலே குறிப்பிட்ட ஆவணங்கள் உங்களிடம் இருந்தாலும், வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருந்தால் மட்டுமே நீங்கள் வாக்களிக்க முடியும்.

பூத் ஸ்லிப்: தேர்தல் ஆணையம் வழங்கும் பூத் ஸ்லிப் என்பது ஒரு தகவல் மட்டுமே, அது அடையாள ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்படாது. எனவே, மேலே உள்ள 12 ஆவணங்களில் ஒன்றை எடுத்துச் செல்வது அவசியம்.

வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் (BLO) உங்கள் வீட்டிற்கே நேரடியாக வந்து இந்தச் சீட்டை விநியோகிப்பார்கள். வாக்குப்பதிவு நடைபெறும் நாளுக்கு (ஏப்ரல் 23, 2026) குறைந்தது 5 நாட்களுக்கு முன்பாக அனைத்து வாக்காளர்களுக்கும் இந்தச் சீட்டு வழங்கப்பட்டுவிடும்.

இதில் உங்கள் வரிசை எண் மற்றும் பாகம் எண் தெளிவாக இருப்பதால், வாக்குச்சாவடியில் உள்ள அதிகாரிகள் உங்கள் விவரங்களை விரைவாகச் சரிபார்க்க முடியும். இது வாக்குச்சாவடியில் கூட்டத்தைக் குறைக்கவும், நீங்கள் வரிசையில் காத்திருக்கும் நேரத்தைக் குறைக்கவும் உதவுகிறது.

[youtube-feed feed=1]