தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள்

சென்னை:

காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த  சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்ட 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், விசாரணை முடிவடைந்த நிலையில், தீர்ப்பு இன்றும் வெளியிடப் படவில்லை.

இதற்கிடையில்,  தகுதி நீக்கம் காரணமாக காலியாக உள்ள 18 தொகுதிகளிலும் தேர்தல் நடத்த உத்தரவிடக் கோரி சென்னை பெரம்பூர் தொகுதியை சேர்ந்த தேவராஜன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், 18 எம்எல்ஏக்களும் செயல்படாத நிலையில் உள்ளதால்,  தொகுதியின் அடிப்படை பிரச்னைகளை தீர்க்க முடியவில்லை. எம்.எல்.ஏ., இருந்தால், சட்டசபையில் பேசுவார்; தேவையான நடவடிக்கைகளை எடுப்பார். தற்போது அவை தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும்,  உள்ளாட்சி தேர்தலும் நடக்கவில்லை. அதனால், கவுன்சிலரும் இல்லை. 18 தொகுதிகளுக்கும் தற்போது, எம்.எல்.ஏ.,க்கள் இல்லாததால், அந்த தொகுதிகளை காலியாக அறிவித்து, உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும்.

இதுகுறித்து, தேர்தல் ஆணையத்துக்கு மனு அனுப்பினேன். இதுவரை, எந்த நடவடிக்கையும் இல்லை. என் மனுவை பரிசீலிக்கவும், உடனடியாக, 18 தொகுதிகளுக்கும் தேர்தல் அறிவிக்கவும் உத்தரவிட வேண்டும்.  மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு தலைமை நீதிபதி அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்சில் இன்று விசாரணைக்கு வருகிறது.