சென்னை,

திமுக கொறடா சார்பாக தொடரப்பட்ட 11 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கை உச்சநீதி மன்றம் விசாரணை செய்ய வேண்டும் என்று ஓபிஎஸ் அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் செம்மலை உச்சநீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

தான் எதிர்பார்த்திருந்த அமைச்சர் பதவி கிடைக்கததால் அதிமுக அரசுக்கு  எதிராக வழக்கு தொடர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

அதிமுகவில் ஏற்பட்ட உச்சக்கட்ட மோதல் காரணமாக, டிடிவி அணியை சேர்ந்த 18 எம்எல்ஏக்க ளின் பதவி செல்லாது என அதிமுக கொறடாவின் வற்புறுத்தலின்பேரில், சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து திமுக சார்பில் கட்சியின் கொறடா சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், ஓபிஎஸ் அணி  11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என திமுக தொடர்ந்துள்ள வழக்கை, உச்சநீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் செம்மலை மனு தாக்கல் செய்துள்ளார்.

இது அதிமுகவில் மீண்டும் பரபரபபை ஏற்படுத்தி உள்ளது.

ஜெ. மறைவை தொடர்ந்து, சசிகலா கட்சி மற்றும் ஆட்சியில் தலையிட்டதால், ஓபிஎஸ் அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கி தனி அணியாக செயல்பட்டார்.  அதையடுத்து சசிகலா சிறைக்கு சென்றதால், அவரது ஆதரவாளரான எடப்பாடி பழனிச்சாமி சட்டம்ன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டு முதல் பதவி வகித்து வருகிறார்.

இதன் காரணமாக அதிமுகவின் பெயர் மற்றும் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது.

தனி அணியாக செயல்பட்டு வந்த ஓபிஎஸ்-சுக்கு முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், செம்மலை, பி.எச்.பாண்டியன், மா.பா.பாண்டியராஜன் உள்பட ஏராளமான முன்னாள் எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் உள்பட தற்போதைய 11 எம்எல்ஏக்களும்  ஆதரவு தெரிவித்து வந்தனர்.

நாளடைவில், எடப்பாடிக்கும் டிடிவி தினகரனுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக அந்த அணியும் இரண்டாக உடைந்தது.

இந்நிலையில்,  ஓபிஎஸ் விதித்திருந்த நிபந்தனைகளை ஏற்கப்பட்டதன் காரணமாக எடப்பாடி அணியுடன் ஓபிஎஸ் அணி இணைந்தது. ஓபிஎஸ் துணை முதல்வராக பதவியேற்றார். மா.பா.பாண்டியராஜனும் அமைச்சராக பதவி ஏற்றார். ஆனால், அமைச்சர் பதவியை எதிர்பார்த்திருந்த செம்மலைக்கு எந்தவித  பதவியும் கொடுக்கப்படவில்லை.

இதன் காரணமாக, ஒதுங்கி இருந்த செம்மலை திமுகவில் சேருவார் என்று கிசுகிசுக்கள் பரவின. ஆனால், அவர் எந்த கட்சியிலும் சேராமல், அதிமுக அணிகளுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளார். திமுகவின் தகுதி நீக்கம் வழக்கை உச்ச நீதி மன்றம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று மனு தாக்கல் செய்துள்ளதன் காரணமாக ஓபிஎஸ் அணியில் இருந்த மோதல் வெளிச்சத்துக்கு வந்தது. செம்மலையின் இந்த நடவடிக்கை தமிழக அரசியலில் மேலும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.