டில்லி:

வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடிக்கு எதிராக சமாஜ்வாதி கட்சி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட முன்னாள் எல்லை பாதுகாப்பு படை வீரர் தேஜ்பகதூர் யாதவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னாள் பாதுகாப்பு படை வீரரான வீரர் தேஜ்பகதூர் யாதவ்  கடந்த 2017ம் ஆண்டு பாகிஸ்தான் எல்லையில் பணியாற்றி வந்த சமயத்தில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும்  இந்திய ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் உணவு மோசமாக இருப்பதாக குற்றம்சாட்டி வீடியோ வெளியிட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவர் ராணுவத்தில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டார்.

இவர் மோடிக்கு எதிராக வாரணாசி தொகுதியில் சமாஜ்வாதி வேட்பாளராக களமிறக்கப்பட்டார். அங்கு வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், வேட்பு மனு பரிசீலனையின்போது, தேஜ்பகதூரின் மனு நிராகரிக்கப்பப்பட்டது. இதற்கு காரணமாக,  பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட அரசு ஊழியர்கள், ஐந்து வருடங்களுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடி ராணுவ வீரர்களின் தியாகம் குறித்து தேர்தல் பிரசாரங்களில் தொடர்ந்து பேசி வாக்கு சேகரித்து வந்த நிலையில் தேஜ்பகதூரின்  மோடிக்கு எதிரான பிரசாரம் பரபரப்பு அடைந்தது.

இந்த நிலையில், அவரது வேட்புமனு நிராகரிப்பை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தேஜ்பகதூர் சார்பாக பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் வாதாட உள்ளார். வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.