வடகிழக்கு பருவமழை இடர்ப்பாடுகளின்போது தட்டுப்பாடின்றி குடிநீர் சப்ளைக்கு 100 பேர் கொண்ட பேரிடர் மீட்புக் குழு! தமிழகஅரசு

Must read

சென்னை: வடகிழக்கு பருவமழை இடர்ப்பாடுகளின்போது தட்டுப்பாடின்றி குடிநீர் சப்ளைக்கு 100 பேர் கொண்ட பேரிடர் மீட்புக் குழு அமைக்கப்பட்டு இருப்பதாக, குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் மகேஸ்வரன்  தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் சி.என்.மேகஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

வடகிழக்கு பருவமழை காலத்தில் கடந்த ஆண்டுகளில் கிடைத்த அனுபவங்களின் அடிப்படையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் வரவிருக்கும் வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக அனைத்து கூட்டுக்குடிநீர் திட்டங்கள் மற்றும் செயலாக்கத்தில் உள்ள திட்டங்களை முறையாக கையாள ஒரு செயல்திட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. பேரிடர் காலங்களில் எளிதாக பாதிக்கப்படும் கூட்டுக்குடிநீர் திட்டங்களுக்கான நீர் உறிஞ்சு கிணறுகள், அவற்றை சுற்றியுள்ள பகுதிகள், ஆற்றுப்பகுதிகளில் உள்ள பிரதான இணைப்பு குழாய்கள் மற்றும் மின்சார கேபிள் இணைப்புகள், குழாய்களை தாங்கும் கான்கிரீட் கட்டமைப்புகள், வால்வுகள், குழாய்கள், நடைபாலங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உள்ளது.

வாரியத்தின் மூலம் இயங்கி வரும் 556 கூட்டுக்குடிநீர் திட்டங்களின் செயல்களை சிறந்த முறையில் பராமரிக்க 226 கண்காணிப்பு பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது. இதற்கு இளநிலை பொறியாளர், உதவி பொறியாளர் மற்றும் உதவி நிர்வாக பொறியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இவர்கள் எளிதாக பாதிக்கப்படும் பகுதிகளை கண்டறிவது, மின்தடை ஏற்பட்டால் மாற்று ஏற்பாடுகளை செய்வது, மின்மோட்டார்களின் செயல்பாடுகளை உறுதி செய்வது, நீர்தேக்கத் தொட்டிகள் சுத்தம் செய்வதை கண்காணித்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவார்கள்.

73 கூட்டுக்குடிநீர் திட்டங்கள்

தமிழகத்தில் 73 கூட்டுக்குடிநீர் திட்டங்கள், பாதாள சாக்கடை திட்டங்கள், நகர குடிநீர் திட்டங்கள் வாரியத்தின் செயலாக்கத்தில் உள்ளது. பணிகள் நடந்து வரும் பகுதிகளில் ஆபத்துகளை தவிர்க்க எளிதாக தொடர்பு கொள்ளும் வகையில் நிர்வாக பொறியாளர், நகராட்சி கமிஷனர், பேரூராட்சி செயல் அலுவலர், கிராமப்புற வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் மாவட்ட நிர்வாக தலைவர் ஆகியோரின் தொடர்பு எண்களுடன் அறிவிப்பு பலகை வைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

குடிநீர், பாதாள சாக்கடை திட்டங்களுக்கு குழிகள் தோண்டும் பகுதிகளில் ஆபத்துகளை தவிர்க்க அறிவிப்பு பலகைகள் வைக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மொத்தத்தில் வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள வாரியம் தயார் நிலையில் உள்ளது.

பாதுகாப்புக்கு தனி கவனம்…

தொழிலாளர்களின் பாதுகாப்பிற்கு தனி கவனம் செலுத்தப்பட வேண்டும். பொதுமக்கள் அவசர தகவல்களை பெற 9445802145, முகநூல் twadgovtn மற்றும் டுவிட்டர் TWAD32978729 போன்ற நவீன சமூக வலைதளங்களில் தொடர்பு கொள்ளலாம். சென்னை தலைமை அலுவலகத்தில் வாரத்தில் 7 நாட்களும் 24 மணி நேரமும் தகவல் மையம் செயல்படும். பொதுமக்கள் தங்கள் பகுதியில் ஏற்படும் குடிநீர் பிரச்சினைகளை தெரிவித்து சீரான முறையில் குடிநீர் வழங்க ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

More articles

Latest article