டில்லி

ஜ் யாத்திரைக்கு செல்லும் உடல் ஊனமுற்றோர் பிச்சை எடுப்பார்கள் என்னும் ஐயத்தினால் அவர்களுக்கு யாத்திரை செய்ய அனுமதிக்கவில்லை என மத்திய பாஜக அரசு உச்சநீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசு உடல் ஊனமுற்றோருக்கு ஹஜ் பயணம் செய்ய அனுமதி மறுத்துள்ளது.   இது குறித்து உச்சநீதிமன்ற வழக்கறிஞர் கௌரவ் குமார் பன்சால் ஒரு வழக்கு ஒன்றை அரசுக்கு எதிராக தொடுத்துள்ளார்.  டில்லி உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட இந்த வழக்கில் அரசின் இந்தக் கொள்கை முடிவு ஊனமுற்றோருக்கு அநீதி வழங்குவதாக குறிப்பிட்டுள்ளார்.   அரசின் உடல் ஊனமுற்றோர் உரிமை சட்டப்படி அவர்களுக்கு மத சுதந்திரம் உள்ளது எனவும் அவர்களை சமமாக மதிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளதை அவர் சுட்டிக் காட்டி உள்ளார்

இந்த வழக்கு டில்லி உயர்நீதிமன்றத்தில் கீதா மிட்டல் மற்றும் ஹரிசங்கர்  ஆகியோரின் அமர்வில் விசாரிக்கப்படுகிறது.    இது குறித்து அமர்வு அரசின் விளக்கத்தை கோரி இருந்தது.   அரசு, “உடல் ஊனமுற்றோர் பலர் ஹஜ் பயணத்தின் போது பிச்சை எடுக்கிறார்கள்.   பிச்சை எடுப்பது சௌதி அரேபிய சட்டத்தின் படி தவறாகும்.   எனவே சௌதி அரசின் அறிவுரையின் படி ’நொண்டிகளையும்’ மற்றும் ‘முடவர்களையும்’  ஹஜ் பயணத்துக்கு அனுமதிக்கவில்லை” என பதில் அளித்தது.

வழக்குப் பதிந்த சௌரவ் குமார் அரசின் இந்த பதிலால் அதிருப்தி அடைந்துள்ளார்.    அவர் தனது வாதத்தில் ”அரசின் இந்த பதில் ஊனமுற்றோரைக் கேவலம் செய்வது போல உள்ளது.  சௌதி அரேபிய அரசு அது போல சந்தேகத்தையோ அறிவுரையையோ வழங்கவில்லை.   மேலும் ஊனமுற்றோரை நொண்டிகள் எனவும் முடவர்கள் எனவும் சொல்வது மிகவும் தவறானது என தெரிவித்தார்.

இதற்கு அரசு தரப்பில், “பெரும்பாலானோருக்கு புரியும் மொழியில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.   ஹஜ் செல்லும் மக்களில்  பெரும்பாலானோர் இந்தி மற்றும் உருது மொழி மட்டுமே அறிந்தவர்கள் ஆவார்கள்.   எனவே அவர்களுக்கு புரியும்படி இவ்வாறு சொல்லப் பட்டுள்ளது.   மற்றபடி அவர்களை தவறாக சொல்லவில்லை”  எனக் கூறப்பட்டுள்ளது.