டில்லி

பாராளுமன்றம் முடக்கப்பட்டதற்கு உண்ணாவிரதம் இருக்கப்போகும் மோடி உன்னாவ் தொகுதியில் நடந்த பலாத்காரத்தை எதிர்த்து உண்ணாவிரதம் இருப்பாரா என ராகுல் காந்தி  கேள்வி எழுப்பி உள்ளார்.

உத்திரப் பிரதேச மாநிலம் உன்னாவ் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரால் ஒரு 18 வயதுப் பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதாக தகவல்கள் வந்தன.   அதை தட்டிக் கேட்ட அந்தப் பெண்ணின் தந்தையை  சட்டமன்ற உறுப்பினரின் சகோதரர் அடித்து உதைத்ததில் அவர் மரணம் அடைந்தார்.    அந்தப் பெண் நீதி கோரி உ. பி.  முதல்வர் இல்லத்தின் முன்பு தீக்குளிக்க முயன்றார்.  அவரை முதல்வரின் பாதுகாவலர்கள் மீட்டுள்ளனர்.

தற்போது இந்த வழக்கு சிபிஐ க்கு மாற்றப்படும் என தெரிய வந்துள்ளது.   அந்தப் பெண்ணின் தந்தை இறப்பதற்கு முன்பு பாஜக சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங்  தன் மகளை பலாத்காரம் செய்ததையும் தன்னை தாக்கியதையும் வீடியோ பதிவு ஒன்றில் தெரிவித்துள்ளார்.   அந்த வீடியோ தற்போது வைரலாகி உள்ளது.

இது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில், “உத்திரப் பிரதேச த்தை சேர்ந்த ஒருவர் தனது மகளுக்கு நேர்ந்த கொடுமைகளை விவரித்து நீதி கேட்கும் வீடியோ மனிதத் தன்மையை அவமானப்படுத்தி விட்டது.  ஒரு பெண்ணுக்கு நடந்த அநீதிக்கு எதிராகவும்,  பாஜக ஆளும் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்ததற்கும் விரைவில் உண்ணாவிரதம் இருப்பர் என நினைக்கிறேன்.”  என பதிந்துள்ளார்.

மேலும் அந்தப் பெண்ணின் தந்தை பேசிய வீடியோவையும் அவர் தனது பதிவுடன் இணைத்துள்ளார்.