சென்னை:  பிரபல இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து காலமானார்.  அவருக்கு வயது 57. மாரடைப்பு காரணமாக அவர் உயிர் பிரிந்ததாக கூறப்படுகிறது.

இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து (56) மாரடைப்பால் சென்னையில் இன்று காலமானார். தமிழ் சினிமாவில் உதவி இயக்குனராக இருந்து இயக்குனராக சில படங்கள் இயக்கி, பல படங்களில் நடித்தும் உள்ளவர் மாரிமுத்து. இயக்குனர் வசந்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய இவர் கண்ணும் கண்ணும், புலிவால் உள்ளிட்ட படங்களை இயக்கியும் உள்ளார். பல படங்களில் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடித்து வந்த இவர் சமீபத்தில் ஜெயிலர் படத்திலும் ஒரு கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் நாடகம் மூலம் அண்மையில் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர், முன்னதாக  கடந்த  23/07/2023 அன்று ஜி தமிழ் தொலைகாட்சியில்  நடைபெற்ற  ’தமிழா தமிழா’ நிகழ்ச்சியில் கலந்து  கொண்டபோது, ஜோதிடம் குறித்து அவதூறாக பேசியுள்ளார்.   மேலும் அவர் ஒருமையில் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, அவர்மீது வழக்கு தொடரப்போவதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மாரடைப்பு காரணமாக இன்று காலை மாரிமுத்து காலமானதாக கூறப்படுகிறது. அவரது மறைவு திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இன்று காலை டப்பிங் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, நெஞ்சுவலி ஏற்பட்டவுடன் டப்பிங் பணியை பாதியில் நிறுத்தி விட்டு அவரது மனைவியிடம் மருத்துவமனை செல்வதாக கூறியதுடன் தானாகவே சிகிச்சைக்காக மருத்துவமனை சென்றுள்ளார். மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தபோதே அவரது உயிர் பிரிந்துள்ளது. நடிகர் மாரிமுத்துவின் உடல் மதியம் மூன்று மணி வரை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின் சொந்த ஊரான தேனி மாவட்டத்திற்கு எடுத்து செல்லப்படுகிறது.