டில்லி:

நாட்டில் நேரடி வருவாய் அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் வரையிலான 6 மாதத்தில் சுமார் 15.8 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக மத்திய நேரடி வரிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்த ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை நேரடி வரியாக ரூ.3.86 லட்சம் கோடி வசூல் ஆகியுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 15.8 சதவீதம் அதிகமாகும். இதில் முன்கூட்டிய வரி செலுத்துவதில் நிறுவனங்கள் மூலம் 8.1 சதவீதமும், தனிநபர் கணக்குகளில் 30.1 சதவீதமும் அதிகரித்துள்ளது.

தனிப்பட்ட நபர் மற்றும் பெருநிறுவனங்கள் முன்கூட்டியே செலுத்திய வரியின் மூலம் நேரடி வரி வருவாயில் 3 லட்சத்து 86 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதலாக கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுவே இந்த மாதத்தில் வரி வசூல் உயர முக்கிய காரணம்.  கடந்த மாதம் 30ம் தேதி வரை, முன்கூட்டிய வரியாக ரூ.1.77 லட்சம் கோடி வசூலாகியுள்ளது. இது முந்தைய ஆண்டு செப்டம்பரை விட 11.5 சதவீதம் அதிகம்.

நடப்பு நிதியாண்டில் நிகர நேரடி வரி வசூல் இலக்காக 9.8 லட்சம் கோடி நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதில் இதுவரை 39.4 சதவீதம் வசூலாகியுள்ளது என மத்திய நேரடி வரிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜூலை 1ம் தேதியில் இருந்து சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமலுக்கு வந்தது. இதன்பிறகு வரி வசூல் கணிசமான அளவு அதிகரித்து வருகிறது.

ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை வரி ரீபண்ட் ரூ.79,660 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக நிகர நேரடி வரி வசூல் 10.3 சதவீதம் அதிகரித்து ரூ.4.66 லட்சம் கோடியாக உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.