அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள மரியாதை புருஷோத்தம ஸ்ரீ ராம் சர்வதேச விமான நிலையம் டிசம்பர் 30 ம் தேதி துவக்கி வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 100க்கும் மேற்பட்ட விமானங்களில் முக்கியஸ்தர்கள் மற்றும் அதிகாரிகள் வரவிருப்பதை அடுத்து இந்த புதிய விமான நிலையம் அதற்காக தயாராகி வருகிறது.

இந்த நிகழ்ச்சிக்காக வரும் விமானங்கள் அயோத்தி விமான நிலையம் தவிர அதன் அண்டை மாவட்ட விமான நிலையங்களில் தரையிறங்கவும் நிறுத்திவைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்கவுள்ள இந்த விமான நிலையத்திற்கு டெல்லியில் இருந்து இண்டிகோ விமானம் தனது முதல் பயணிகள் விமானத்தை டிசம்பர் 30 ம் தேதி இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

விமான நிலைய துவக்க விழா குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு பிரதமர் மோடியின் ஒப்புதலை அடுத்து வெளியிடப்படும் என்று அயோத்தி மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

துவக்க விழாவை தொடர்ந்து ஜனவரி 6 முதல் அகமதாபாத் மற்றும் டெல்லி ஆகிய நகரங்களில் இருந்து அயோத்திக்கு நேரடி விமான சேவை துவங்க உள்ளது.

ஜனவரி 22 ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுவதை அடுத்து ஜன். 16 முதல் ஹைதராபாத், மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, சென்னை மற்றும் கோவா ஆகிய இடங்களில் இருந்து வழக்கமான விமான சேவை தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் அவை வாரத்திற்கு எத்தனை சேவை என்பது குறித்த அறிவிப்பை இண்டிகோ நிறுவனம் விரைவில் அறிவிக்கும் என்றும் கூறப்படுகிறது.

ராமர் கோயில் கும்பாபிஷேகம் முடிந்ததும் 100 நாட்களுக்கு 543 மக்களவை தொகுதியில் இருந்தும் தொகுதிக்கு 5000 பேரை அயோத்திக்கு அழைத்து வர சங் பரிவார் அமைப்புகள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தினமும் சுமார் 50,000 முதல் 1 லட்சம் பேர் வரை வந்து செல்லும் அளவுக்கு திருப்பதிக்கு நிகரான கோயிலாக அயோத்தி ராமர் கோயிலை முன்னெடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

அயோத்தி ராமர் கோயிலுக்கு 6 அடக்கு போலீஸ் பாதுகாப்பு… கும்பாபிஷேகத்தின் போது அசம்பாவிதம் ஏற்படாத வகையில் தீவிர பாதுகாப்பு…