உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் 70 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலுக்கு வரும் ஜனவரி 22-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

ராம கதை, பஜனை, லேசர் ஷோ என்று ஜனவரி 14ம் தேதி முதல் உ.பி. மாநிலம் முழுவதும் கோலாகல கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதை அடுத்து இதற்காக உ.பி. மாநில அரசு நிர்வாகம் முழுவதுமாக முடுக்கிவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் மற்றும் சங் பரிவார் அமைப்பைச் சேர்ந்தவர்கள் அயோத்தியில் குவிய வாய்ப்பு இருப்பதை அடுத்து இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அசம்பாவிதத்தில் யாரும் ஈடுபடாத வகையில் 6 அடுக்கு பாதுகாப்பை மாநில அரசு மேற்கொண்டுள்ளது.

கோயிலைச் சுற்றி எட்டு மசூதிகள் உள்ளதை அடுத்து அதன் மீது தாக்குதல் நடந்தால் யார் பொறுப்பு என்று உள்ளூர் அமைப்புகள் கேள்வியெழுப்பிய நிலையில் அயோத்தி முழுவதும் தீவிர பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ராமர் கோவிலுக்கு செல்வதற்கான பாதைகளின் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது. கோயிலுக்கு செல்லும் அனைத்து பிரதான வழிகளும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அதற்காக மூன்று இடங்களில் சோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. கோவிலுக்குள் எதையும் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

தவிர, அயோத்தியில் உள்ள தங்கும் விடுதிகள் மற்றும் குடியிருப்புகளில் உள்ள வெளியூரைச் சேர்ந்தவர்கள் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட்டு கண்காணிக்கும் பணி துவங்கியுள்ளது.

கோவில் வளாகத்தின் பாதுகாப்பிற்கு மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையினர் வழங்கியுள்ள பல முக்கிய ஆலோசனைகளை உ.பி அரசு அமல்படுத்தியுள்ளது.

அயோத்தி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை பச்சை மண்டலமாகவும் கோயிலுக்குச் செல்லும் பிரதான சாலைகளை மஞ்சள் மண்டலமாகவும் பிரித்து பலகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கோயில் வளாகத்தைச் சுற்றி சிகப்பு மண்டலமாக வரையறுக்கப்பட்டு தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அயோத்தியின் எல்லா இடங்களிலும் CRPF, UPSSF, PAC மற்றும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஹெலிகாப்டர், ட்ரான் உள்ளிட்டவை பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

நகரின் அனைத்து இடங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளதோடு கோயில் வளாகத்தைச் சுற்றி செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் கூடிய 600 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தவிர பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட அனைவருக்கும் அடையாளத்துடன் கூடிய சிறப்பு அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

ராமர் கோயில் கும்பாபிஷேக நிகழ்வில் எந்தவொரு அசம்பாவிதமும் ஏற்படாத வகையில் ஆறு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன் சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையதளங்கள் மூலம் தீவிரவாத தாக்குதல் ஏதும் நடைபெறாமல் இருக்கவும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு இன்னும் ஒருமாதமே உள்ள நிலையில், வயதானவர்கள் வரவேண்டாம் என்று கோயில் நிர்வாகம் ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளது. கோயிலுக்காக கல், மண் சுமந்த கோடிக்கணக்கான பக்தர்களையும் அனுமதிக்க சாத்தியமில்லாததால் முக்கியஸ்தர்கள், தொழிலதிபர்கள், விளையாட்டு மற்றும் திரையுலக பிரபலங்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் மட்டுமே கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும் உ.பி.யை சுற்றியுள்ள ம.பி., ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் உள்ள மக்கள் மற்றும் பாஜக கட்சி நிர்வாகிகள் பலரும் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவுக்கான சிறப்பு அனுமதிக்காக காத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

9 நாட்கள் பஜனை : ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை ஒட்டி மாவட்ட ஆட்சியர்கள் முதல் தாலுகா அலுவலர்கள் வரை அனைவருக்கும் உ.பி. அரசு உத்தரவு