சாந்த நரசிம்மர் திண்டுக்கல் மாவட்டம்

சுயம்பு லிங்கத்துடன் வீற்றிருக்கும்  மனித முக நரசிம்மர்

மனித முகத்துடன் சாந்தமாக வீற்றிருக்கும் நரசிம்மர் திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார் சத்திரம் அருகே கொத்தப்புள்ளி கிராமத்தில் வீற்றிருக்கிறார்.

இவருக்கு முன் சுயம்பு லிங்கம் உள்ளது.

தல வரலாறு:

மன்னர் ஒருவர், சிவன், பெருமாள் இருவருக்கும் கோவில் கட்ட விரும்பினார். மன்னரின் கனவில் தோன்றிய சிவனும், பெருமாளும், இத்தலத்தைப் பற்றிக் குறிப்பிட்டுச் சொல்லி, கோவில் கட்ட உத்தரவிட்டனர்.  அதன்படி இங்கு வந்த மன்னர், ஓரிடத்தில் சுயம்புலிங்கம் இருப்பதைக் கண்டார். அந்த லிங்கத்தின் அருகிலேயே பெருமாளுக்குச் சிலை வடித்து பிரதிஷ்டை செய்தார்.

பெருமாளுக்கு, ” நரசிங்கப் பெருமாள்’ எனப் பெயர் சூட்டினார். காலப்போக்கில் பெருமாள் பிரசித்தி பெறவே, அவரது பெயரில் தலம் அழைக்கப்பெற்றது.

சாந்த நரசிம்மர்: 

கருவறையில் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் சங்கு, சக்கரம் ஏந்தி, நின்ற கோலத்தில் நரசிம்மர் காட்சி தருகிறார். பத்ம விமானத்தின் கீழ் இருக்கும் இவருக்குச் சிங்க முகம் கிடையாது. சாந்தமாக மனித முகத்துடன் காட்சி தருகிறார். சன்னிதி எதிரில் கருடாழ்வார் வீற்றிருக்கிறார்.

முதலில் பெருமாளுக்கும், அடுத்து சிவனுக்குத்தாக பூஜை நடக்கிறது.

சிவனுக்குரிய பரிவார மூர்த்தியான பைரவர் பிரகாரத்தில் இருக்கிறார். தேய்பிறை அஷ்டமி நாளில் விசேஷ பூஜை இவருக்குண்டு.

பிரகாரத்தில் வடக்கு நோக்கி வீர ஆஞ்சநேயர் அருள்புரிகிறார். திருமணம், புத்திர தோஷம் நீங்க எலுமிச்சை, துளசி மாலை அணிவித்து இவரை வழிபடுகின்றனர்.

சூரிய தோஷ நிவர்த்தி:

இங்குள்ள பெருமாள், ” கதிர் நரசிங்கர் பெருமாள்’ எனப்படுகிறார்.   கதிர் என்பது சூரிய ஒளியைக் குறிக்கும். சூரியன் தொடர்பான தோஷம் நீக்குபவர் என்பதால் இப்பெயர் ஏற்பட்டது. சூரியதசை, புத்தி நடப்பவர்கள் இங்கு வழிபட்டால் தோஷம் நீங்கி நன்மை பெருகும்.

 கமலவல்லி தாயார் தனிச் சன்னிதியில் வீற்றிருக்கிறாள். மாணவர்கள் கல்வியில் சிறப்பிடம் பெற, இங்குள்ள லட்சுமி ஹயக்ரீவருக்கு ஏலக்காய் மாலை அணிவித்து வேண்டிக் கொள்கிறார்கள்.

சக்கரத்தாழ்வார்: 

சக்கரத்தாழ்வார் தனிச் சன்னிதியில் வீற்றிருக்கிறார்.  அக்னி ஜுவாலை கிரீடத்துடன் இருக்கும் இவருக்கு பதினாறு கைகளிலும் ஆயுதங்கள் உள்ளன. இவரைச் சுற்றிலும் காயத்ரி மந்திர தேவதைகளின் சிற்பம் உள்ளது.  சக்கரத்தாழ்வாருக்கு மேலே ஹிரணியனை சம்ஹாரம் செய்த நரசிம்மரும், பாதத்தில் லட்சுமி நரசிம்மரும் காட்சியளிக்கின்றனர். பின்புறத்தில் யோக நரசிம்மர் நான்கு கைகளிலும் சக்கரம் ஏந்திய கோலத்தில் இருக்கிறார்.