சென்னை

நாளை 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது.

நடந்து முடிந்த 12 ஆம் வகுப்புக்கன மாணவ-மாணவிகளுக்கான பொதுத் தேர்வை தமிழகத்தில் சுமார் 7 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் இந்த தேர்வை எழுதி உள்ளனர்.   இந்த விடைத்தாள்களைத் திருத்தும் பணி கடந்த மாதம் (ஏப்ரல்) 2 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை நடந்து முடிந்தது.

பொதுத் தேர்வு தொடர்பான அட்டவணை வெளியிடப்பட்ட போதே, தேர்வு முடிவு குறித்த தேதியும் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதாவது முடிவுகள் மே 6 ஆம் தேதிவெளியாகும் என்று அப்போது தெரிவிக்கப்பட்டு இருந்தது.  ஆனால்அதே தேதியில் தேர்வு முடிவு வெளியாகுமா? என்ற கேள்வி எழுந்தது.

பள்ளிக்கல்வித் துறையின் கீழ் வரும் அரசு தேர்வுத் துறை திட்டமிட்டபடி மே 6-ந்தேதி பிளஸ்-2 வகுப்புகளுக்கான தேர்வு முடிவு வெளியிடப்படும் என அறிவித்ததோடு, பத்தாம் வகுப்புக்கும் வருகிற 10-ந்தேதி பொதுத் தேர்வு முடிவு வெளியாகும் என்றும் தெரிவித்தது.  எனவே தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக வைக்கப்பட்டுள்ளன.

12 ஆம் வகுப்பு மாணவ-மாணவிகள் வீட்டில் இருந்தபடியே தெரிந்து கொள்வதற்கு ஏதுவாக அவர்கள் பள்ளிகளில் கொடுத்திருந்த செல்போன் எண்ணுக்கு மதிப்பெண் விவரங்கள் வழக்கம்போல அனுப்பி வைக்கப்பட உள்ளன. அரசுத் தேர்வுத் துறையின் இணையதளத்தில் (www.tnresults.nic.in, www.dge.tn.gov.in) சென்றும்  தெரிந்துகொள்ளலாம்.