தினகரன் கைது சரியான நடவடிக்கை: மருத்துவர் இராமதாசு

Must read

“தினகரன் கைது சரியான நடவடிக்கை” என்று பாமக நிறுவனர்  மருத்துவர் இராமதாசு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை”

“இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக தேர்தல் ஆணையத்திற்கு இடைத்தரகர் மூலம் கையூட்டு கொடுக்க முயன்ற வழக்கில் அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரனை தில்லி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தில்லி நீதிமன்றத்தின் கண்டனத்திற்குப் பிறகு மிகவும் தாமதமாகத் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாலும் வரவேற்கத்தக்கதாகும்.

இரட்டை இலையை மீட்க கையூட்டு கொடுக்க முயன்ற விவகாரத்தை தினகரன், அவரது நண்பர், இடைத்தரகர் ஆகியோர் மட்டுமே சம்பந்தப்பட்ட தனித்த நடவடிக்கையாகப் பார்க்கக்கூடாது. ஆட்சியைத்  தக்கவைத்துக் கொள்வதற்காக அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களை கூவத்தூரில் உள்ள உல்லாச விடுதிக்கு அழைத்துச் சென்று அடைத்து வைத்தது, அவர்களின் ஆதரவை தக்க வைத்துக் கொள்ள  கோடிக்கணக்கில் பணத்தையும், கிலோ கணக்கில் தங்கத்தையும் வாரி இறைத்தது, சென்னை இராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தலில் தினகரனை வெற்றி பெறச் செய்வதற்காக வாக்காளர்களுக்கு பணமாக ரூ.89 கோடி, பரிசுப் பொருட்களாக ரூ.100 கோடி என வாரி இறைக்கப்பட்டதன் தொடர்ச்சியாகவே இந்த நிகழ்வையும் பார்க்க வேண்டும். அப்போது தான் இதன் முழுப் பரிமாணமும் வெளியில் வரும்.

2016-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்த அதிமுக அரசுக்கு இன்னும் 4 ஆண்டுகள் பதவிக்காலம் உள்ளது. இந்த பதவிக்காலத்தை பயன்படுத்தி இன்னும் பல லட்சம் கோடி அளவுக்கு ஊழல் செய்ய வேண்டும் என்பதற்காகவே, பெரிய மீனைப் பிடிப்பதற்காக தூண்டிலில் கோர்க்கப்படும் சிறிய புழுக்களைப் போன்று சில நூறு கோடிகளை தினகரன் தரப்பினர் வீசி எறிந்திருக்கின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடித்தல், இயற்கை வளங்களை கொள்ளையடித்து லட்சக்கணக்கான கோடிகளை சுருட்டுதல் என்பன உள்ளிட்ட  மிகப்பெரிய சதித்திட்டத்தின் ஓர்அத்தியாயம் தான் சின்னத்திற்காக கையூட்டு கொடுக்கப்பட்டதாகும்.

இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரை தாம் சந்தித்தது உண்மை என்று தினகரன் ஒப்புக்கொண்டிருக்கிறார். இருவருக்கும் இடையிலான தொலைபேசி உரையாடல்கள்  பதிவு செய்யப்பட்டு தில்லி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. சுகேஷ் சந்திரசேகரிடம்  இருந்து ரூ.1.30 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. தேர்தல் ஆணையத்திற்கு தினகரன் கையூட்டு கொடுக்க முயன்றதற்கு அசைக்க முடியாத முதற்கட்ட ஆதாரங்களாக இவை உள்ளன. அதனால் இதுவரை கைது செய்யப்பட்டவர்களை மட்டும் வைத்து இவ்வழக்கை முடித்துவிடக் கூடாது.

இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு கொடுக்கப்பட்ட பணம்  தினகரனுக்கு சொந்தமானது அல்ல… அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டவர்கள் மூலம் கையூட்டாக பெறப்பட்டது என்பது வருமானவரித்துறை நடத்திய சோதனைகளின் மூலம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல், தேர்தல் ஆணையத்திற்கு கையூட்டாக தருவதற்காக இடைத்தரகருக்கு முன்பணமாக தரப்பட்டிருந்த சில கோடிகளும், இறுதிக்கட்டமாக தரப்படவிருந்த ரூ.60 கோடியும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் மூலம் ஊழல் செய்து சேர்த்த பணமாகத் தான் இருக்க முடியும்.

இந்தப் பணத்தை திரட்டுவது பற்றி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்களுடன் தினகரன் நிச்சயம் ஆலோசனை நடத்தியிருக்க வேண்டும். அவர்களுக்கிடையே நடைபெற்ற கூட்டுச் சதியின் முடிவில் தான் ஆணையத்திற்கு கையூட்டு கொடுக்கும் முடிவு எடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

அதுமட்டுமின்றி, பணம் கொடுத்தால் இரட்டை இலை சின்னத்தை மீட்டுத் தருவதாக தினகரனின் இடைத்தரகருக்கு தேர்தல் ஆணையத்திலிருந்து யாராவது வாக்குறுதி அளித்தார்களா? அப்படியானால் அந்த வாக்குறுதியை அளித்தவர்கள் யார்? அவர்கள் எந்த அதிகார நிலையில் உள்ளவர்கள் என்பது குறித்தும் விசாரிக்கப்பட வேண்டும். சின்னத்திற்காக கையூட்டு கொடுப்பவர்களை விட, அதற்கு இடம் தருபவர்கள் தேர்தல் ஆணையத்தில் இருந்தால் அது ஜனநாயகத்திற்கு கூடுதல் ஆபத்தாகும்.

எனவே, தேர்தல் ஆணையத்திற்கு, இடைத்தரகர் மூலமாக தினகரன் கையூட்டு கொடுக்க முயன்ற வழக்கில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்களுக்கு உள்ள தொடர்புகளையும்,  இந்த விஷயத்தில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருக்கிறார்களா? என்பதையும் கண்டறிய விசாரணை வளையத்தை தில்லி காவல்துறை விரிவுபடுத்த வேண்டும். அதுமட்டுமின்றி, அரசியலமைப்பு சட்டத்தின்படி உருவாக்கப்பட்ட தேர்தல் ஆணையத்திற்கே அதிமுக அம்மா அணி கையூட்டு கொடுக்க முயன்றிருப்பதால், இதை ஜனநாயகப் படுகொலையாகக் கருதி அதிமுகவின் அங்கீகாரத்தை ரத்து செய்வதுடன், இரட்டை இலை சின்னத்தையும் தேர்தல் ஆணையம் நிரந்தரமாக முடக்க வேண்டும்” –  இவ்வாறு ராமதாசு தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

More articles

Latest article