முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுவதாக அதிமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்  அறிவித்துள்ளார்.

தினகரன் – பழனிச்சாமி

அ.தி.மு.க.வில் முன்னாள் முதல்வரும் தற்போதைய துணை முதல்வருமான ஓ.பி.எஸ். மற்றும் தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் ஓர் அணியாகவும், கட்சி துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தனி அணியாகவும் செயல்பட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் டி.டி.வி. தினகரன், கட்சி பொறுப்பாளர்கள் பலரை நீக்குவதாக அறிவித்து வருகிறார்.

இதற்கு ஒரு உதாரணம் வைத்தியலிங்கம் எம்.பி. ஆவார்.  அ.தி.மு.க. இரு அணிகள் நேற்று இணைந்தபோது  இவர்,  ஒருங்கிணைப்பு குழுவில் துணை அமைப்பாளர் பதவி வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

அதன் பிறகு வைத்திலிங்கம் கூறுகையில், “பொதுக்குழுவை கூட்டி சசிகலாவை கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்குவதற்கு வேண்டிய நடவடிக்கை எடுக்கப்படும்“ என்றார்.

இதற்கிடையே சசிகலாவை பற்றி கருத்து தெரிவித்த வைத்திலிங்கம் எம்.பி.யை அ.தி.மு.க.வில் இருந்து நீக்கி டி.டி.வி.தினகரன் அறிவித்தார்.

அதே போல அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் கோகுல இந்திராவை அப்பொறுப்பில் இருந்து நீக்குவதாகவும் அவருக்குப் பதிலாக நடிகர் செந்திலை நியமிப்பதாகவும் தினகரன் அறிவித்தார்.

இது போல பல பொறுப்பாளர்களை நீக்கி புதிய பெயர்களை அறிவித்து வருகிறார்.

இந்த நிலையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுவதாக அதிமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்  அறிவித்துள்ளார்.

அதாவது சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நீக்கப்பட்டதாகவும்,  அவருக்குப் பதிலாக முன்னாள் எம்எல்ஏ எஸ்.கே. செல்வம் நியமிக்கப்படுவதாகவும் தினகரன் அறிவித்துள்ளார்.

அவரது அறிவிப்பு அ.தி.மு..க. வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.