சென்னை

மிழ்நாடு ஹோமியோபதி மெடிகல் கவுன்சில் தலைவர் கொடுத்த புகாரின் பேரில் 5 போலி ஹோமியோபதி டாக்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மக்களிடையே பிரபலாமாக உள்ள மருத்துவ முறைகளில் ஹோமியோபதியும் ஒன்று.   இந்த மருத்துவ முறைக்கு மருத்துவர் சான்றிதழ் வழங்குவது தமிழ்நாடு ஹோமியோபதி மெடிகல் கவுன்சில் ஆகும்.   இதன் தற்போதைய தலைவர் ராஜசேகரன்.   இவர் சுமார் 18 மாதங்களுக்கு முன் கவுன்சிலின் பழைய தலைவரும் உறுப்பினர்களும் முறைகேடாக பல சான்றிதழ்கள் வழங்கியுள்ளதாக போலீசில் புகார் அளித்திருந்தார்.

அந்த புகாரில் ”கவுன்சில் பலருக்கு போலி மருத்துவ சான்றிதழ் முந்தைய பதிவாளர் சவுந்தரராஜனால் வழங்கப்பட்டுள்ளது.   இதற்கு முன்னாள் தலைவர் ஹஹேமான், கவுன்சில் உறுப்பினர்கள் ரங்கசாமி மற்றும் பரமேஸ்வரன் நம்பியார் உடந்தையாக இருந்துள்ளனர்.   கடந்த 2010 முதல் 2012 வரை இது போல நிறைய சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.  இதற்கான நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.

சுமார் 18 மாதங்கள் கழிந்த பின்னர் இது பற்றி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.   முதல் தகவல் அறிக்கை கடந்த 18ஆம் தேதி அன்று பதிவாகி உள்ளது.  அதன் அடிப்படையில், ஐந்து போலி ஹோமியோபதி மருத்துவர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.   இவர்கள் கடலூர், தேனி, கோவை, மதுரை, திருப்பூர் ஆகிய நகரங்களில் உள்ளவர்கள்.   மேலும் நான்கு பேர் முன் ஜாமீன் வாங்கியுள்ளார்கள்.