சென்னை:

தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் நாளை காலை 10.30 மணிக்கு கவர்னர் வித்யாசாகர் ராவை சந்திக்கின்றனர்.

சட்டமன்றத்தை உடனே கூட்ட வேண்டும் என்று எதிர்க்கட்சியான தி.மு.க. மற்றும் காங்கிரஸ் என்று வலியுறுத்தி வருகின்றன. அப்போது அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் கோரி வருகின்றன. இதற்காக கவர்னரை சந்திக்க தி.மு.க. தரப்பில் நேரம் கேட்கப்பட்டிருந்தது.

தமிழகத்தில் அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசலால் ஆட்சியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் கவர்னர் வித்யாசாகர் ராவ் மும்பையில் இருந்து இன்று சென்னை வந்துள்ளார்.

இந்நிலையில் தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களிடம் இன்று கூறுகையில், ‘‘முதல்வர் மீது நம்பிக்கையில்லை என 19 எம்.எல்.ஏ.க்கள் கூறியுள்ள நிலையில் அரசு பெரும்பான்மையை இழந்து விட்டது. பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியை தொடர்ந்தால் கவலையில்லை.

ஆளுநர் ஜனநாயகத்தை காத்திடுவார் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்றார். இதையடுத்து துரைமுருகன் தலைமையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் நாளை காலை 10.30 மணியளவில் கவர்னர் வித்யாசாகர் ராவை சந்திக்கின்றனர்.