டில்லி

கோவிஷீல்ட் மருந்து விலையில் சீரம் இன்ஸ்டிடியூட் மற்றும் மத்திய அரசு ஆகிய இரு தரப்பிலும் மாறுபட்ட அறிவிப்புக்கள் வெளியாகின்றன

வரும் மே மாதம் 1 ஆம் தேதியில் இருந்து 18 வயதைத் தாண்டிய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசிகள் போடப்படும் என மத்திய அரசு அறிவித்தது.   அத்துடன் மாநில அரசுகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து நேரடியாகக் கொள்முதல் செய்யலாம் எனவும்  இதற்கான விலையை நிறுவனங்கள் முன் கூட்டியே அறிவிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியது.

அதையொட்டி கோவிஷீல்ட் மருந்து உற்பத்தி நிறுவனமான சீரம் இன்ஸ்டிடியூட் மாநில அரசுகளுக்கு ரூ.400 விலைக்கும் தனியாருக்கு ரூ.600 விலைக்கும் விற்பனை செய்ய உள்ளதாக அறிவித்தது.  தற்போது இந்நிறுவனம் மத்திய அரசுக்கு ரூ.150க்கு இதே மருந்தை விற்பனை செய்கையில் இந்த விலை இரு மடங்குக்கும் அதிகமாக உள்ளதால் கடும் சர்ச்சை ஏற்பட்டது.

இந்நிலையில் மத்திய சுகாதார அமைச்சர் சமீபத்தில் தனது டிவிட்டரில் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகிய இரு மருந்துகளுக்கும் மத்திய அரசு ரூ.150 விலை விதித்துள்ளதாகவும் அதற்கு மேல் அளிக்கப்போவதில்லை எனவும் அறிவித்திருந்தார்.   அந்த அறிவிப்பு வெளியாகிய ஒரு சில மணி நேரங்களில் சீரம் இன்ஸ்டிடியூட் தலைமை அதிகாரி அதார் பூனேவாலா வேறு விதமாக அறிக்கை வெளியிட்டார்.

அதார் பூனேவாலா தனது அறிக்கையில்,  “தற்போது கொரோனா தடுப்பூசியின் தேவை அதிகரித்துள்ளதாலும் விலை குறித்த சர்ச்சைகள் எழுந்துள்ளதாலும் இந்த அறிக்கையை வெளியிடுகிறோம்.   தற்போது தனியாருக்கு ரூ.600 விற்பனை செய்வதில் எவ்வித மாறுதலும் இருக்காது.” எனத் தெரிவித்துள்ளார்.  ஆனால் இந்த விலை ஏற்றுமதி விலையை விட அதிகமாக உள்ளது குறித்து விளக்கம் அளிக்கவில்லை

கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி அன்று பூனேவாலா ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இனி மத்திய மாநில அரசுகளுக்கு ரூ.400 விலையில் அளிக்க உள்ளதாகவும் இனி வரும் விநியோகத்தில் மத்திய அரசுக்கு ரூ.150 விலைக்குத் தடுப்பூசிகள் அளிக்க முடியாது எனவும் தெரிவித்திருந்தார்.  அப்போதைய நிலையில் சுமார் 10 கோடி டோஸ்கள் வரை மட்டுமே ரூ.150 விலையில் அளிக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.

தற்போது மாநில அரசுகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளின் விலை குறித்து அறிவித்த அதார் பூனேவலா மத்திய அரசுக்கு அள்க்கப்போகும் விலை குறித்து எவ்வித தகவலும் தெரிவிக்கவில்லை.  அதே வேளையில் அதார் புனேவாலா அளித்த பேட்டியும் மத்திய அமைச்சர் அறிவிப்பும் ஒன்றுக்கொன்று முரணாக உள்ளதால் மக்கள் பெரிதும் குழப்பம் அடைந்துள்ளனர்.