நெட்டிசன்:

சமூக ஆர்வலர் பாரதி சுப்பராயன் (Bharathi Subbarayan) அவர்களின் முகநூல் பதிவு:

மீபத்தில் ஒரு பேட்டியில், சமுத்திரக்கனி, தனக்குப் பிடித்த தலைவர்களாக நல்லகண்ணு, ஜோதிபாசு மற்றும் யோகி ஆதித்யநாத்தை குறிப்பிட்டிருக்கிறார்.

நல்லகண்ணுவையும், ஜோதிபாசுவையும், யோகி ஆதித்தயநாத்துடன் நேர் கோட்டில் வைப்பது, தேனைக் கொண்டு போய் மாட்டுச்சாணத்துடன் இணைப்பதற்கு சமம் என்பதை சித்தாந்த அறிவுள்ளோர் புரிந்துகொள்வர். இவரின் இந்த விவரிப்பிற்கு சித்தாந்த அறிவுக் குறைபாடே காரணம் என்று நம்புகிறேன். அரசியல் மற்றும் வரலாற்று நூல்களை சமுத்திரக்கனி படிக்க வேண்டும்.


நல்லகண்ணு, ஆதித்தயநாத் ,யோகி , ஜோதிபாசு

இடது மற்றும் வலது சித்தாந்தத்திற்கு இடையில் உள்ள வித்தியாசம் புரியாதவர்கள் நம் நாட்டில் ஏராளம் உண்டு. ஆனால் அந்த லிஸ்டில், தன்னை முற்போக்காக அடையாளம் காட்டிக்கொள்ளும் சமுத்திரக்கனியும் இணைந்திருப்பது தான் ஆச்சர்யம், வருத்தம்.

நம்மில் பெரும்பாலானோருக்கு இடது மற்றும் வலது சித்தாந்தம் என்றால் என்ன என்று தெரியாது. அவர்களுக்காக, இடது மற்றும் வலது சித்தாந்தம் பற்றிய ஒரு சிறு குறிப்பு.

சமுத்திரக்கனி

முதலில் அதை ஏன் ‘இடது’ மற்றும் ‘வலது’ என்று கூறுகிறோம் என்பதில் இருந்து ஆரம்பிப்போம்.

1789ம் வருடம் ஃபிரன்ச்சுப் புரட்சி நடந்த காலத்தில், மன்னர் பதினாராம் லூயி, பிரான்சை ஆண்டு கொண்டிருந்தார். அப்போது, பிரன்ச்சு தேசிய சபையில் இருந்த உறுப்பினர்கள், கருத்தியல் ரீதியாக இரண்டாகப் பிரிந்தார்கள். ஒரு பிரிவினர் மன்னராட்சியே தொடர வேண்டும் என்றனர். மற்றொரு பிரிவினர், மன்னராட்சி ஒழிந்து மக்களாட்சி மலர வேண்டும் என்று புரட்சியை ஆதரித்தனர். மன்னராட்சியை ஆதரிப்பவர்கள் அனைவரும் சபை தலைவரின் வலதுபுறம் அமர்த்தப்பட்டனர். மன்னராட்சியை எதிர்த்து, மக்கள் புரட்சியை ஆதரித்த அனைவரும் சபைத் தலைவரின் இடதுபுறம் அமர வைக்கப்பட்டனர்.

மன்னராட்சியை ஆதரிப்போர் பக்கம், மதவாதிகள், நிலச்சுவானதார்கள், தொழிலதிபர்கள், போன்றோர் சேர்ந்தனர். மதச்சம்பிரதாயங்கள், கலாச்சாரம், தொன்றுதொட்டுவரும் வழக்கங்கள், அதிகாரம், போன்றவை முக்கியம் என்பது அவர்கள் வாதம்.

மன்னராட்சியை எதிர்ப்போர் பக்கம் சாதாரன மக்கள் அதிகமிருந்தனர். மக்கள் நலம், சமதர்ம உலகம், பொருளாதார மற்றும் சமூக ஏற்றத்தாழ்வு ஒழிப்பு, சுதந்திரம் போன்றவை அவர்களது வாதம்.

அன்றிருந்த பத்திரிக்கைகள் இவர்களை ‘இடதுசாரிகள்’, ‘வலதுசாரிகள்’ என்று குறிப்பிட, அன்றிலிருந்து, உலகம் முழுவதும், மத சம்பிரதாயங்கள், கலாச்சாரம், அதிகாரம், தொன்றுதொட்டு வரும் பழக்கவழக்கங்கள் என்று செல்லும் அரசியல் இயக்கங்களை ‘வலதுசாரிகள்’ என்றும், மனிதநேயம், சமதர்மம், ஏற்றத்தாழ்வு ஒழிப்பு, அகண்ட பார்வை, சுயநலமின்மை என்று செல்லும் இயக்கங்களை ‘இடதுசாரிகள்’ என்றும் கூப்பிட ஆரம்பித்தனர்.

திரு சமுத்திரக்கனிக்கு ஒரு வேண்டுகோள். ஒன்று இடதில் நில்லுங்கள், அல்லது வலதில் நில்லுங்கள். இரண்டிற்கும் நடுவில் வேண்டுமானாலும் நின்றுகொள்ளுங்கள். ஆனால் தயவுசெய்து இரண்டிலும் நிர்க்காதீர்கள்.

கொசுறுச் செய்தி:

மன்னராட்சியை எதிர்ப்போருக்கு இடதுபுறம் என்று ஒதுக்கப்பட்டதிலேயே ஒரு அரசியல் ஓரவஞ்சனை உண்டு என்றும் சிலர் சொல்வதுண்டு. உலகத்தில் பெரும்பாலானோர் வலது கைப்பழக்கம் கொண்டவர். அதனால் வலதே உயர்வு, இடது தாழ்வு என்னும் மனப்பான்மை அன்று உலகம் முழுதும் இருந்தது. (நம் ஊரிலும் இந்த ஏற்றத்தாழ்வு உண்டு, ஆனால் காரணம் வேறு.) அதனால், திட்டமிட்டு அவமானப்படுத்தவே மன்னராட்சியை எதிர்ப்பவர்களுக்கு இடதுபுறம் ஒதுக்கப்பட்டது என்பது அவர்கள் குற்றச்சாட்டு.

அதில் உண்மை இல்லாமல் இல்லை. ஆங்கிலத்தில் right என்பதை நேர்மரையாகவும், left என்பதை எதிர்மரையாகவும் பயன்படுத்துவர். கீழுள்ள வாக்கியங்களைப் படித்தால் உங்களுக்குப் புரியும்.

 

Right got the righteousness and left got only leftovers.

Tom was right in his opinion. Mary felt left out.