கொல்லப்பட்ட வாசுதேவன்

சென்னை:

சென்னையில் மாட்டு இறைச்சி சாப்பிடுவது தொடர்பான தகராறில் சமூக ஆர்வலர் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டதாகவும், இந்த சம்பவத்தில் தொடர்புள்ள ஐந்து இஸ்லாமிய இளைஞர்கள் கைது செய்யப்பட்டதாகவும் தினத்தந்தி நாளிதழில் இன்று செய்தி வெளியானது. ஆனால் இது தவறான செய்தி என்று இறந்தபோனவரின் குடும்பத்தினரே தெரிவித்துள்ளனர்.

சென்னை சூளைமேடு என்.ஜி.ஒ. காலனியைச் சேர்ந்தவர்  வாசுதேவன்.   51 வயதான இவருக்கு மனநிலை சரியில்லை.

இவர் கடந்த நான்காம் தேதி சூளைமேடு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஜமின் அன்சாரி (21) அசாருதீன் (21)  ஆசிக் உசேன் (21), யாசீப் அலி (20), இம்ரான் (19) ஆகிய  ஐந்து இளைஞர்கள், வாசுதேவனை கிண்டல் செய்துள்ளனர்.  இதையடுத்து அவர்கள் மீது வாசுதேவன் கற்களை எறிந்துள்ளார். பதிலுக்கு ஐந்து இளைஞர்களும் வாசுதேவன் மீது கற்களை எறிந்துள்ளனர். இதில் படுகாயமடைந்த வாசுதேவன் மரணமடைந்தார்.

தினத்தந்தி செய்தி

இந்த சம்பவத்தைத்தான், “மாட்டுக்கறி விவகாரத்தில் இஸ்லாமிய இளைஞர்கள் ஒருவரை அடித்துக்கொன்றுவிட்டனர்” என்பதாக செய்தி பரவியது. இதை தினத்தந்தி நாளிதழும் வெளியிட்டுள்ளது.

ஆனால், “ஐந்து இளைஞர்களும் மது போதையில் இருந்துள்ளனர். போதையில் வாசுதேவனை கிண்டல் செய்துள்ளனர். இதையடுத்து மோதல் ஏற்பட்டதில் அவர் மரணமடைந்தார். மற்றபடி மாட்டுக்கறி விவகராம் ஏதும் இல்லை” என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இதே கருத்தை வாசுதேவன் குடும்பத்தினரும் தெரிவித்தனர்.

“குற்றச் செயலில் இஸ்லாமிய இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர் என்ற உடனே அதை மாட்டுக்கறி விவகாரமாகவோ, பயங்கரவாத தாக்குதலாகவோ சித்தரிக்கும் ஊடகங்கள் நிலை வருந்தத்தக்கது” என்று ஆதங்கப்படுகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.