ராஞ்சி: இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி அவசரப்பட்டு ஓய்வுபெறக்கூடாது என்றும், அவரால் எவ்வளவு நாளைக்கு கிரிக்கெட் விளையாட்டை அனுபவிக்க முடிகிறதோ, அவ்வளவு நாட்கள் விளையாட வேண்டுமென்றும் கூறியுள்ளார் முன்னாள் ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர் கிளன் மெக்ராத்.

ஜார்க்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில், இளைஞர்களுக்கு பந்துவீச்சு பயிற்சியளிப்பதற்காக வந்துள்ள மெக்ராத் இதை தெரிவித்தார்.

உலகக்கோப்பை போட்டிகளின் முடிவில், 37 வயதாகும் தோனி ஓய்வுபெறுவார் என்று பரவிவரும் செய்திகளை அடுத்து அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“மகேந்திர சிங் தோனியின் அனுபவம், குறிப்பிட்ட ஓவர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே, அவர் ஓய்வுபெறுவது குறித்து அவசரப்பட்டு சிந்திக்கக்கூடாது. அவரால், எவ்வளவு காலத்திற்கு விளையாட்டை ரசிக்க முடிகிறதோ, அவ்வளவு நாளைக்கு விளையாட வேண்டும்” என்றுள்ளார்.

கடந்த ஞாயிறன்று பாகிஸ்தானுக்கெதிராக தனது 341வது ஒருநாள் போட்டியை விளையாடிய தோனி, ராகுல் திராவிட்டை பின்னுக்குத் தள்ளினார். கடந்த 2 ஆண்டுகளாகவே தோனியின் ஸ்ட்ரைக் ரேட் குறைவாக இருக்கிறது. அவரின் கேரியர் ஸ்ட்ரைக் ரேட் 87 என்பது குறிப்பிடத்தக்கது. இதனையொட்டியே அவரின் ஓய்வு குறித்த பேச்சுகள் எழுந்து வருகின்றன.