மும்பை: இந்திய அணியில் தோனியின் இருப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், அவர் கேப்டன்களின் கேப்டன் என்றும் தெரிவித்துள்ளார் சுரேஷ் ரெய்னா.
இதுபோன்ற கருத்தை ஏற்கனவே கேப்டன் விராத் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் தெரிவித்துள்ள நிலையில், சுரேஷ் ரெய்னாவும் தன் பங்கிற்கு இதை தெரிவித்துள்ளார்.
சுரேஷ் ரெய்னா இந்திய அணி மற்றும் ஐபிஎல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளில் தோனியின் தலைமையில் விளையாடிய அனுபவம் உள்ளவர்.
அவர் கூறியதாவது, “மைதானத்தில் தோனி இருந்தாலே வீரர்களுக்கு தனி நம்பிக்கை வந்துவிடும். சட்டப்படி தோனி கேப்டன் இல்லையென்றாலும், மைதானத்திற்குள் இறங்கிவிட்டால் அவர் எப்போதுமே கேப்டன்தான். அவரின் பங்களிப்பு அப்படியேதான் தொடர்கிறது.
தோனி மைதானத்திற்குள் இருந்தால், விராத் கோலியே ரிலாக்சாக செயல்படுவார். அதன்மூலம் அவர் தெளிவான முடிவுகளை மேற்கொள்ள முடியும். இந்த உலகக்கோப்பையை வெல்வதற்கான அனைத்து திறமைகளும் இந்திய அணியின் கேப்டன் கோலிக்கு இருக்கிறது” என்றார்.