தன்யா ராஜேந்திரன்
தன்யா ராஜேந்திரன், தற்பொழுது தி நியூஸ் மினுட் எனும் இணையதளப் பத்திரிக்கையின் தலைமைப் பதிப்பாசிரியர். சென்னையில் உள்ள ஆசியப் பத்திரிக்கையாளர் கல்லூரியின் பட்டதாரியான இவர், எட்டு ஆண்டுகள் டைம்ஸ் நவ் செய்தித்தொலைக்காட்சியில் பணியாற்றி தென் மாநிலச் செய்திகளின் பொருப்பாளராய் இருந்தவர். இவரின் திறமையான செய்திச் சேகரிப்பால் பல மனித உரிமை மீறல்கள் மற்றும் ஊழல் குறித்த செய்திகள் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியதோடல்லாமல், இந்தியாவின் உயர்ந்த புலனாய்வுத் துறையான சி.பி.ஐ-யின் விசாரணைக்கும் வித்திட்டது. தம்முடைய மிகுந்த வேலைப்பளுவிற்கிடையே நம்முடைய கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.
வாருங்கள் அவரது பேட்டியைக் காண்போம்.
 
dhnaya raj final 1
கேள்வி : பத்திரிக்கைத் துறையில் தங்களுக்கு ஆர்வம் ஏற்பட்டது எப்படி?
பதில்: 1997 காலக்கட்டத்தில் இந்திய அரசியல் சதுரங்கம் நிறைய தலைமை  மாற்றங்களைச் சந்தித்து வந்த வேளையில்,  நான் பள்ளியில் பயின்றுக் கொண்டிருந்தேன். இருப்பினும், அதிக முனைப்போடு தேசியச்செய்தி நிகழ்ச்சிகள் பார்ப்பேன். இந்தியாவில் நிலவும் அரசியல் ஸ்திரத்தன்மையின்மை மற்றும் ஆட்சியாளர்களின் தவறுகளுக்கு ஏன் பொதுமக்கள் பலிகடா ஆக்கப் படுகின்றனர் என்று வேதனையுடனும், கோபத்துடனும் தொலைகாட்சிகளில் “பிரதம நேர”  தொகுப்பாளர்கள்  பொங்கி எழுவதைப் பார்த்து நானும் அவர்களது பதற்றத்தை உணர்ந்துள்ளேன்.  மக்களின் குரலாய் ஒலிக்க வல்லது பத்திரிக்கைத் துறை தான் என்பதை அன்றே உணர்ந்துக்கொண்டேன். அவர்களின் குரல் என்னில் பசுமரத்தாணி போல் பதிந்து விட்டது.
dhanya raj 3
கேள்வி : பத்திரிக்கைத் துறையில் இதுவரையிலான உங்கள் பயணத்தை நீங்கள் எப்படி மதிப்பிடுகின்றீர்கள் ?
பதில்:  என் பயணம் மிகவும் திருப்திகரமானதாக இருப்பதாகவே கருதுகின்றேன்.  என் தாரகமந்திரம் மிகவும் எளிதானது. ஒவ்வொரு நாள், வாரம், மாதம் அல்லது ஆண்டு, இறுதியில்,நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி ஒன்று தான் “நம்முடைய சுயலாபத்திற்காக யாரையும் பலிகடா ஆக்குகின்றோமா ?. இதையே என்னுடன் பணியாற்றும் அனைவருக்கும் நான் கூறி வருகின்றேன்.   தொழில்ரீதியாக முதலில்  நான் ஒரு பிராந்திய சேனலில்  நிருபராக பணியைத் தொடங்கினேன். பிறகு, நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் மிகக் குறுகிய காலம் பணியாற்றினேன்.  எட்டு ஆண்டுகள் டைம்ஸ் நௌ- சேனலில் பணியாற்றியது மிகப்பெரிய கற்றல் அனுபவத்தை தந்தது. ஏனெனில்,  பல 24 மணி நேர செய்தி சேனல்கள் ஒரே நேரத்தில் தொடங்கப்பட்டு ஒரு கடும்போட்டி நிலவி வந்த நேரம் அது.  பெரும்பாலும் ‘அண்மைச்செய்தி’க்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது என்றாலும்,  எனக்கு பிடித்தமான கதைகள் தொடர்வதற்கு போதிய சுதந்திரம் அதிஸ்டவசமாக  கிடைத்தது. குறுகிய காலத்திலேயே தென்னிந்தியாவின் செய்தித்தொகுப்பை முன்னெடுக்கும் முக்கியப் பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டது. அது என் அறிவிற்கு எட்டிய வரையில், மாநிலங்களில் நிலவும் அரசியல் சூழ்நிலைகள் மற்றும் பிரச்சனைகள் குறித்து புரிந்துக் கொள்ளும் வாய்ப்பினை எனக்குத் தந்தது.    
கேள்வி : ஒரு பத்திரிகையாளராக அத்தியாவசிய தகுதிகள் எனத் தாங்கள் எதனைக் கருதுகின்றீர்கள்?
 பதில்: ஒரு பத்திரிகையாளர் பச்சாதாபம்  மிக்கவராகவும், கதை கேட்கும் பொறுமை நிறைந்தவராகவும் இருக்க வேண்டும்  மேலும் மற்றவர்களின் கதையைச் சொல்ல பேரார்வம் கொண்டவராகவும் இருத்தல் அவசியம்.
கேள்வி : பாதிக்கப் பட்டவர்களுக்கு முதலுதவிக்கு ஏற்பாடு செய்யாமல், பத்திரிகையாளர்கள் பிஸியாக காணொளி அல்லது புகைப்படம் எடுக்கின்றார்கள் என்று பரந்து விரிந்த விமர்சனம் உள்ளதே. இது குறித்து தங்கள் நிலைப்பாடு என்ன?
பதில்: என்னால் துல்லியமான வரையரையைக் கொடுக்க இயலாது. ஏனெனில் ஒவ்வொரு சம்பவத்திற்கும் ஒரு பொதுவான துல்லியமான விதிமுறைகளை வகுக்க முடியாது என்று கருதுகின்றேன். எல்லா ஊடகவியலாளர்களும், எப்போதும் பொதுமக்கள் போல் செயல்பட வேண்டும் என்றால் யார் தான் சம்பவத்தை செய்தியாக்குவது? எனவே, இது போன்ற நேரங்களில், நடைபெறும் சம்பவங்களின் தன்மை மற்றும் உள்ளுணர்வின் உந்துதல் படி நடப்பது அவசியம்.
கேள்வி : ஒவ்வொரு பத்திரிக்கையாளருக்கும் தனிப்பட்ட சித்தாந்தம் உண்டு . அதனை தன் படைப்பில், நிகழ்ச்சியில் வெளிபடுத்த வேண்டிய அவசியமில்லை. இது குறித்து தங்கள் கருத்து ?
பதில்: பத்திரிக்கையாளர் மட்டுமல்ல, நம்மைச் சுற்றி உள்ள ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு சித்தாந்தம் உள்ளது. ஒரு பத்திரிகையாளர் தாம் தரும் செய்தி அறிக்கையை முற்றிலும் உண்மைகளை அடிப்படையாகக் கூறினால் , அங்கு சித்தாந்தம் என்ன என்கிறக் கேள்வியே எழாதல்லவா? எனவே தான் அனைத்து நல்ல ஊடக அமைப்புக்களும் தங்களுடைய பத்திரிகையாளர்களை உண்மைகளின் அடிப்படையில் மட்டும் செய்திகளை வெளியிடவும் தங்களுடைய தனிப்பட்ட சித்தாந்தங்களை ஊடுருவ விடக்கூடாது எனவும் அறிவுறுத்துகின்றன. அப்படி கருத்துக்கள் கூறினால், அது செய்தியாளரின் தனிப்பட்ட கருத்து என தெளிவாகக் குறிப்பிடப் படவேண்டும். இந்த முக்கியப் பிரச்சனையில் செய்தி நிறுவனத் தலைமைகள் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

…….பேட்டி தொடரும்…